நூன்மரபு278

எல்லாம்  என்றதனான்  நாட்டம்,  ஆட்டம்  என்பன உகரம் பெறாது
வந்தன  என்பார்  உரையாசிரியர்.  அவை  நாடு, ஆடு என்னும் குற்றுகர
ஈற்றுத்     தொழிற்பெயர்கள்   அம்விகுதி   பெற்று    நின்றனவாதலின்
பொருந்தாதென்க.
 

சூ. 328 :

ஈமும் கம்மும் உருமென் கிளவியும்

ஆமுப் பெயரும் அவற்றோ ரன்ன 

(33)
 

க-து : 

மகர ஈற்றுப் பெயருள் சில உகரம் பெறுமென்கின்றது.
 

பொருள் : ஈம்,  கம்,  உரும்   என்னும்  சொற்களாகிய  அம்மூன்று
பெயர்களும்  தொழிற்  பெயர்களைப்  போல  இருவழியும்  உகரம்பெற்று
முடியும்.
 

எ.டு :ஈமுக்கடிது;  கம்முக்கடிது;  உருமுக்கடிது,  சிறிது,  தீது, பெரிது
எனவும்  ஈமுக்கடுமை;  கம்முக்கடுமை;  உருமுக்கடுமை,  சிறுமை,  தீமை,
பெருமை எனவும் வரும். ஞ ந ம வரின் இயல்பாகும்.
 

ஒன்றெனமுடித்தல்  என்பதனான்  தம், நம், நும்  என்னும் சாரியைகள்
தம்மை உணர்த்தும் வழி உகரம் பெறுதல் கொள்க.
 

சூ. 329 :

வேற்றுமை யாயின் ஏனை யிரண்டும்

தோற்றம் வேண்டும் அக்கென் சாரியை 

(34)
 

க-து :

மேற்கூறியவற்றுள்  இரண்டற்கு   வேற்றுமைக்கண்  சிறப்புவிதி
கூறுகின்றது.
 

பொருள் : வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாயின் மேல் நின்ற ஈம், கம்
என்னும் இரண்டும் அக்கு என்னும் சாரியையொடு தோன்றி வரும்.
 

எ. டு:ஈமக்குடம்;   கம்மக்குடம்,  சாடி,  தூதை,  பானை  எனவரும்.
ஏனைக் கணங்களொடும் ஒட்டிக் கொள்க.
 

ஏற்புழிக்கோடல்  என்பதனான்  ஏனையிரண்டும் என்றது ஈமும் கம்மும்
எனக்  கொள்க.  ‘‘மேனை’’ இரண்டும்  எனப் பாடம் இருத்தல் வேண்டும்
எனக்கருத  வேண்டியுளது. மேனை  மேல்நின்றவை. அஃதாவது முதற்கண்
நின்ற ஈமும் கம்மும் என்பது இப்பாடத்தின் பொருளாம்.
 

சூ. 330 :

வகார மியையின் மகாரங் குறுகும் (35)
 

க-து :

மகர ஈறு மாத்திரை திரியுமாறு கூறுகின்றது.