உம்மையை ஆன்மிசையும் எனக்கூட்டிப் பிறசாரியையும் வரும் என்று கூறி மகத்துஞான்று கொண்டான் எனக்காட்டுவர் உரையாசிரியர். ஞான்று என்பது நாள் அன்று (அந்நாள்) என்னும் சொற்களின் மரூஉவாகலானும் ஞான்றென்பதொரு சாரியை ஆசிரியர் கூறாமையானும் அது பொருந்துமாறில்லை என்க. இங்ஙனம் உரையாசிரியன்மாரின் பிழையான கொள்கைகள் பல பின்எழுந்த இலக்கணநூல்களுக்கு அடிப்படையாகித் தமிழ் நெறிச்சிதைவுக்குக் காரணமாயின. |
சூ. 332 : | னகார இறுதி வல்லெழுத் தியையின் |
| றகார மாகும் வேற்றுமைப் பொருட்கே |
(37) |
க-து : | னகர ஈற்று வேற்றுமைப் புணர்ச்சியாமாறு கூறுகின்றது. |
பொருள் : பெயர் இறுதியாகிய னகரஒற்று, வருமொழியாக வல்லெழுத்து வந்து புணரின் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் திரிந்து றகரமாகும். |
எ - டு : பொற்குடம், சாடி, தூதை, பானை எனவும் தற்பகை எனவும் வரும். |
சூ. 333 : | மன்னும் சின்னும் ஆனும் ஈனும் |
| பின்னும் முன்னும் வினையெஞ்சு கிளவியும் |
| அன்ன இயல என்மனார் புலவர் |
(38) |
க-து : | ஒருசார் னகரஈற்று இடைச்சொற்கும் னகர ஈற்றுப் பெயர்க்கும் வினையெச்சத்திற்கும் மேற்கூறிய விதியை எய்துவிக்கின்றது. |
பொருள் : மன், சின், ஆன், ஈன், பின், முன் என்னும் சொல்லீறுகளும், னகரஈற்று வினைஎச்சச் சொல்லிறுதியும் மேற்கூறிய இயல்பினவாய் வல்லெழுத்தியையின் றகரமாகும். |
இசின் என்பது சின் என முதற்குறையாய் நின்றது. மன், சின் என ஓதப்பட்டனவேனும் அவை பெயரொடும் வினையொடும் நடைபெற்றியலும் என்னும் இலக்கணத்திற்றிரியா என்க. மேல் வரும் இடைச் சொற்களுக்கும் இவ்விளக்கம் ஒக்கும். ஆன், ஈன் என்பவை சுட்டுப் பெயர்கள்; பின், முன் என்பன இடப்பெயரும் காலப்பெயருமாம். |
எ - டு : அதுமற் கொண்கன்றேரே - காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை எனவும், ஆற்கொண்டான், ஈற்கொண்டான் எனவும், பிற்கிடந்தான், முற்சென்றான் எனவும் தரிற்கொள்ளான், காணிற் பெறுவான் எனவும் வரும். |