நூன்மரபு283

சூ. 339 :

மீன்என் கிளவி வல்லெழுத் துறழ்வே
(44)
 

க - து :

மீன் என்னும் பெயர்க்குச் சிறப்புவிதி கூறுகின்றது.
 

பொருள் :  மீன்  என்னும்   சொல்   வல்லெழுத்துவரின்   இயல்பும்
திரிபுமாக உறழ்ந்து வரும்.
 

எ. டு: மீன்கண்  -  மீற்கண்;   மீன்செவி  -    மீற்செவி,    தலை,
புறம்  எனவரும். உடூவின் பெயராகிய விண்மீன் என்பதே முதற் குறையாய்
மீன்    எனச்   சிறுபான்மையாக    வழங்கலின்    அதற்கு    இவ்விதி
பொருந்தாதென்க. அது  மீன்கணம்,  மீன்செறிவு, தோற்றம்,  பொலிவு என
இயல்பாயே வரும்.
 

சூ. 340 :

தேனென் கிளவி வல்லெழுத் தியையின்

மேனிலை ஒத்தலும் வல்லெழுத்து மிகுதலும்

ஆமுறை இரண்டும் உரிமையும் உடைத்தே

வல்லெழுத்து மிகுவழி இறுதி இல்லை

(45)
 

க - து :

தேன்   என்னும்    சொல்   வல்லெழுத்தொடு   புணருமாறு
கூறுகின்றது.
 

பொருள் : தேன் என்னும் சொல், வல்லெழுத்து வந்து புணரின் மேற்
கூறியாங்கு  உறழ்தலும்,   மிகுதலும்   ஆகிய    அம்முறை   இரண்டும்
உரிமையுடையதாகும்.  அங்ஙனம்   வல்லெழுத்து  மிகுங்கால் னகர இறுதி
கெடும்.
 

எ. டு:  தேன்குடம் - தேற்குடம் எனவரும். சாடி, தூதை, பானை என
ஒட்டிக்  கொள்க.  தேக்குழம்பு,  சிதைவு,  தெளிவு,  பாளிதம்  எனவரும்.
மிகுதலும்   என்னும்  உம்மை  எதிர்  மறை.   அதனான்   தேன்குழம்பு,
தேன்சிதைவு, தேன்துளி, தேன்பாகு என இயல்பாதலே வலியுடைத்தென்க.
 

சூ. 341 : 

மெல்லெழுத்து மிகினும் மான மில்லை
(46)
 

க - து :

தேன்  என்னும்    சொற்கு     எய்தியதன்மேற்   சிறப்புவிதி
கூறுகின்றது.
 

பொருள் :   தேன்   என்னும்   சொல்   வல்லெழுத்து   இயையின்
மிகுதலேயன்றி மெல்லெழுத்து மிக்குப்புணரினும் குற்றமில்லை.
 

எ.டு :  தேங்குழம்பு, தேஞ்சாடி, தூதை, பானை எனவரும். னகரக்கேடு
அதிகாரத்தாற் கொள்க.
 

சூ. 342 :

மெல்லெழுத் தியையின் மிகுதியொடு உறழும்
(47)
 

க-து :

அது மெல்லெழுத்தொடு புணருமாறு கூறுகின்றது.