நூன்மரபு285

ஒற்றுமிகுதகரம்  இறால்   தோற்றத்திற்கேயாகலான்    ஏனை   உயிர்
முதன்மொழிவரின்   தேனடை,     தேனாறு,   தேனீ,  தேனுணா  எனப்
பொதுவிதியாற்  புணருமென்க.  தேத்தடை, தேத்தீ  என்பவை  சான்றோர்
வழக்காயின் புறனடையாற் கொள்க.
 

இவ்விரண்டு    சூத்திரங்களையும்   ஒன்றாக    ஓதின்   னகரக்கேடு
பெறப்படாதென்க.
 

சூ. 345 :

மின்னும் பின்னும் பன்னும் கன்னும்

அந்நாற் சொல்லும் தொழிற்பெய ரியல

(50)
 

க-து :

ஒருசார்  னகர  ஈற்றுச்சொற்களுக்குத்  தொழிற்பெயருக்கு ஓதிய
விதியை மாட்டேற்றிக் கூறுகின்றது.
 

பொருள் :  மின்,  பின், பன்,  கன் என்னும்  அந்நான்கு சொற்களும்
தொழிற்பெயரியல்பினவாய்  உகரம்   பெற்று  வல்லெழுத்துவரின்  மிக்கும்
ஏனைக்கணங்கள்வரின் இயல்பாயும் புணரும்.
 

எ.டு : மின்னுக்கடிது,  சிறிது,  தீது,  பெரிது எனவும்; மின்னுக்கடுமை,
சிறுமை, தீமை, பெருமை  எனவும்; மின்னுஞான்றது;  மின்னுஞாற்சி எனவும்
வரும்.  நீண்டது-நீட்சி, மாண்டது-மாட்சி,  வலிது-வன்மை என்பவற்றொடும்
கூட்டிக்கொள்க.  இவ்வாறே  பின்,  பன்,  கன்  என்பவற்றோடும்  ஏற்பன
கூட்டிக் கொள்க.
 

இந்நான்கும்  பெயர்ப்பொருளினவாதலின் ‘தொழிற்பெய ரியல’ என்றார்.
மின்-மின்னற்கொடி;  பின்-கூந்தல்ஒழுங்கு; பன்-சொல்;  கன்-கொல்லச்சாதி.
இவை தொழிலை உணர்த்துங்கால் முதனிலைத் தொழிற் பெயர்களாம்.
 

சூ. 346 :

வேற்றுமை யாயின் ஏனை எகினொடு

தோற்றம் ஒக்கும் கன்னென் கிளவி

(51)
 

க-து :

கன் என்னும் பெயர்க்குச் சிறப்புவிதி கூறுகின்றது.
 

பொருள் : வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாயின் கன் என்னும் சொல்,
பறவையை உணர்த்தும் எகின் என்னும்  சொல்லுக்குரிய  விதியொடு ஒத்து,
அகரம்  பெற்று,  வல்லெழுத்து  வரின்  மிக்கும், ஏனைக்  கணங்கள்வரின்
இயல்பாயும் புணரும்.
 

எ. டு:கன்னக்குடம், சாடி, தூதை, பானை எனவும் கன்னஞாற்சி, நீட்சி,
மாட்சி,  யாப்பு,  வன்மை   எனவும்   வரும்.   ‘தோற்றம்’  என்றதனான்
சிறுபான்மை கன்னந்தட்டு என மெல்லெழுத்து மிகுதலும் கொள்க.