பொருள் : ஆதன், பூதன் என்னும் பெயர்கள், தந்தை என்னும் முறைப்பெயர்வரின், மேற்கூறிய திரிபுகளொடு நிலைமொழிப் பெயருள் எஞ்சி நின்ற ஒற்றும், வருமொழிமுதலிற் றிரிந்து நின்ற அகரமும் முற்றக்கெடும். பெயரொற்றும் அகரமும் என விரித்துக் கொள்க. |
எ.டு :ஆதன் + தந்தை உ ஆத் + அந்தை உ ஆ + ந்தை = ஆந்தை எனவரும். பூதன் + தந்தை உ பூந்தை எனவரும். |
ஆதன், பூதன் என்பவற்றின் முதனிலையாகிய குறைஉரிச் சொற்கள் ஆத், பூத் என்பவையாகலின் அவை மெலிந்து தை என்பதனொடு கூடி ஆந்தை, பூந்தை என நின்றமையறிக. இதுவும் தொல்லோரது வழக்காறு நோக்கிக் கூறிய இலக்கணமே என்க. |
‘துவர’ என்பதனான் அழான், புழான் என்பவையும் அழாந்தை, புழாந்தை எனவருதல் கொள்க என்பார் உரையாசிரியர். அவை சான்றோர் வழக்காயின் புறனடையாற் கொள்ளல் தகும். |
சூ. 349 : | சிறப்பொடு வருவழி இயற்கை யாகும் |
(54) |
க-து : | மேற்கூறிய இயற்பெயர்கள் அடையொடுவரின் இயல்பாகும் என்கின்றது. |
பொருள் : மேற்கூறிய இயற்பெயர்கள் சிறப்பாகிய அடையொடு கூடி நின்றவழித் திரிபின்றிப் புணரும். |
‘இயற்கையாகும்’ எனப் பொதுப்படக் கூறினமையின் வருமொழியாகிய தந்தை என்னும் சொல்லும் திரிபுறாது இயல்பாக வரும் எனக் கொள்க. |
எ. டு:நெடுஞ்சாத்தன் தந்தை, பெருங்கொற்றன் தந்தை கருங்குழலாதன் தந்தை, கணியன்பூதன்தந்தை, ஆதன்தந்தை, பூதன்தந்தை எனவரும். |
சூ. 350 : | அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியும் |
| நிற்றலும் உரித்தே அம்மென் சாரியை |
| மக்கள் முறைதொகூஉம் மருங்கி னான |
(55) |
க-து : | மேற்கூறிய இயற்பெயர்கள் மக்கள் முறைமைச் சொல்லொடு புணருமாறு கூறுகின்றது. |