நூன்மரபு288

பொருள் :  மேற்கூறிய   னகாரஈற்று   இயற்பெயர்கள்முன்   மக்கள்
முறைதோன்ற நிற்கும்  சொற்கள்  புணருமிடத்து,  அவை  மெய்யொழித்து
இறுதி  கெட்டுநின்ற  வழியும், (உம்மையான்)  மெய்யொடு  இறுதி  கெட்டு
நின்ற வழியும் அம் என்னும் சாரியை பெற்று நிற்றலும் உரித்தாகும்.
 

எ. டு:  கொற்றங்கொற்றன்   -   மூலங்கீரனார்   -   பூதம்புல்லனார்,
சல்லியங்குமரனார்    எனவரும்.     பூதன்   +    தத்தனார்    என்பது
மெய்யொடுங்கெட்டுப் பூதத்தனார் (அகம்-74) எனவும் வரும்.
 

உம்மையான் கொற்றங்குடி,  சாத்தங்குடி எனவருதலும் கொள்க என்பார்
நச்சினார்க்கினியர்.      அவை    வழூஉவழக்காதலின்    ஒவ்வாதென்க.
கொற்றமங்கலம், சாத்தமங்கலம் என்பவை உயிரீறாகிய (தொகை-11) என்னும்
தொகைமரபுச் சூத்திரத்து ‘‘எல்லா வழியும்’’ என்பதனான் முடியும் என்க.
 

சூ. 351 :

தானும் பேனும் கோனும் என்னும்

ஆமுறை இயற்பெயர் திரிபிட னிலவே

(56)
 

க-து :

னகார ஈற்றுப் பெயர் சிலவற்றிற்கு எய்தியது விலக்குகின்றது.
 

பொருள் :  தான்,  பேன்,  கோன்  என்னும் ஆகிவரும் முறைமையை
உடைய இயற்பெயர்கள் திரிதல் இலவாம்.
 

எ. டு:  தான்றந்தை,  கோன்றந்தை  எனவும்   தான் கொற்றன், பேன்
கொற்றன், கோன் கொற்றன் எனவும் வரும்.
 

தாயன், பேயன்,  கோவன்  என்னும் சொற்களே  இடைக்  குறையாய்த்
தான், பேன்,  கோன் என  வழங்குதல் நோக்கி ‘‘ஆம் முறை இயற்பெயர்’’
என்றார்.   தான்தந்தை-தான்   என்பானின்  தந்தை.  தான்கொற்றன்-தான்
என்பானின்  மகனாகிய  கொற்றன் எனப்பொருள்   கொள்க.  ஏனையவும்
அன்ன.
 

சூ. 352 :

தான்யான் எனும்பெயர் உருபியல் நிலையும்
(57)
 

க-து :

தான்யான் என்பவை திரிந்துபுணரும் என்கின்றது.
 

பொருள் :  தான் என்னும்  படர்க்கைப்  பெயரும்   யான்  என்னும்
தன்மைப்  பெயரும்  உருபுபுணர்ச்சிக்கு ஓதியவாறு  வேற்றுமைப் பொருட்
புணர்ச்சிக்கண் நின்று புணரும்.