நூன்மரபு290

எ.டு :முன்ற் + இல்  = முன்றில் எனவரும். இல்  முன் எனற்  பாலது
மாறி   நின்றுழி   முன்னில்   என  ஏறி  முடியாமல் ஒரு  றகர  ஒற்றுப்
பெற்றுமுடிதலின் மரூஉவாயிற்றென்க.
 

சூ. 356 :

பொன்னென் கிளவி ஈறுகெட முறையின்

முன்னர்த் தோன்றும் லகாரம் மகாரம்

செய்யுள் மருங்கின் தொடரிய லான

(61)
 

க-து :

பொன்   என்னும்    சொல்   செய்யுள்    வழக்கிற்படுமியல்பு
கூறுகின்றது.
 

பொருள் :  பொன்   என்னும்   ஈரெழுத்தொரு   மொழி,  செய்யுள்
வழக்கின்கண் தொடர்மொழியாகுமிடத்து, னகர இறுதி கெட அதன் முன்னர்
முறையே லகர உயிர்மெய்யும் மகர ஒற்றும் தோன்றும்.
 

எ. டு:பொன்-பொலம் எனத்தொடர்மொழியாகி  வரும். லகர ஒற்றொடு
மகரம் மயங்காதாகலின் லகரம் என்றது உயிர் மெய்யை என்பது பெறப்படும்.
 

பொலம்   என    நின்ற     வழி     அவ்ஈறு  அம்முச்சாரியையின்
இயல்பிற்றாகலின் வல்லெழுத்துவரின் மகரம் கிளை ஒற்றாகத் திரியும் என்க.
இஃது உய்த்துணர்தலின் பாற்படும்.
 

எ. டு:   பொலங்கலஞ்  சுமந்த  (அகம்-16)   பொலஞ்சுட   ராழியின்,
பொலந்தார்க்   குட்டுவன்   (புறம்-343)   பொலம்படை   (மலைபடு-574)
எனவரும்.  மெல்லெழுத்துவரின்   பொலநறுந்தெரியல்,  பொலமலர் எனக்
கெடுமென்க.
 

‘‘தொடரியலான’’  என்றது   தொடர்மொழி  இயல்பினதாக  ஆதற்கண்
என்றவாறு. இதுவும் மரீஇய மரபு  என்பதுணர  இதனை ‘முன்னென்கிளவி’
என்பதன் பின்வைத்தார் என்க.
 

சூ. 357 :

யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின்

வல்லெழுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே

(62)
 

க.து :

யகர ஈற்று வேற்றுமைப் புணர்ச்சி யாமாறு கூறுகின்றது.
 

பொருள்:  யகர ஈற்றுப் பெயர்கள் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்
வல்லெழுத்து வந்து இயையின் அவ்வல்லெழுத்து மிக்குப் புணரும்.
 

எ. டு:நாய்க்கால்; பேய்க்கால், செவி, தலை, புறம் எனவரும்.