நூன்மரபு292

பொருள்:  வல்லெழுத்தும்  மெல்லெழுத்தும்  உறழ்ந்து  வரும்  யகர
ஈற்றுச் சொற்களும் உள.
 

எ. டு:வேய்க்குறை - வேய்ங்குறை, சிறை, தலை, புறம் எனவரும்.
 

சூ. 361 :

அல்வழி யெல்லாம் இயல்பென மொழிப
(66)
 

க-து :

யகர ஈற்று அல்வழி முடிபாமாறு கூறுகின்றது.
 

பொருள் :  யகரஈற்றுப்  பெயர்  எல்லாம்  அல்வழிக்கண் இயல்பாகப்
புணரும் என்று கூறுவர் புலவர்.
 

எ. டு:  நாய்   குறிது,  சிறிது,   தீது,  பெரிது  எனவரும்.  ‘எல்லாம்‘
என்றதனான்  தாய்ச்சென்றான்,  போய்ப்பெற்றான்  என வினையெச்சத்தின்
கண்ணும் பொய்ச்சொல், மெய்ப்பொருள் என இருபெயரொட்டின்  கண்ணும்
மிகுதல் கொள்க.
 

சூ. 362 :

ரகார இறுதி யகார இயற்றே
(67)
 

க-து :

ரகரஈற்று வேற்றுமைப்புணர்ச்சியாமாறு கூறுகின்றது.
 

பொருள்: ரகாரஈற்றுப் பெயர்கள் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்
யகர  ஈற்றுக்கு  ஓதிய  இயல்பிற்றாகும்  என்றது;  வல்லெழுத்து மிகுதலும்
சிறுபான்மை மெல்லெழுத்தொடு உறழ்தலுமாம் என்றவாறு.
 

எ.டு :  தேர்க்கால்,  தேர்ச்சீலை,  தேர்த்தலை,  தேர்ப்புறம்  எனவும்,
வேர்க்குறை - வேர்ங்குறை எனவும் வரும். இம்பர்க் கொண்டான், உம்பர்க்
கொண்டான் என உருபின் பொருள்பட வருவனவும் இதன்கண் அடங்கும்.
 

இனி,   இவ்ஈற்று   அல்வழிக்குரியவிதி  நூலுள்   காணப்படாமையான்
அச்சூத்திரம்  இருந்து  கெட்டிருத்தல்  வேண்டும், அல்லது யகார இயற்றே
என்னும் மாட்டேறு  பொதுப்பட நின்றதாகக் கொண்டு ‘‘அல்வழி யெல்லாம்
இயல்பென   மொழிப’’  என்பதனை   விதியாகக் கொள்ளுதல் வேண்டும்.
அவ்விதிப்படி ரகர ஈறு அல்வழிக்கண் தேர்குறிது, சிறிது, தீது, பெரிது என
வருதலும்,  அச்சூத்திரத்து  ‘‘எல்லாம்’’  என்ற  மிகையான் வேர் குறிது -
வேர்க்குறிது என்னும் உறழ்ச்சியும் தகர்க்குட்டி என இருபெயரொட்டின்கண்
மிகுதலும் கொள்க.
 

இக்கோட்பாடும்  விளக்கமும்  ழகர   ஈற்று  அல்வழிப் புணர்ச்சிக்குங்
கொள்க.