நூன்மரபு293
சூ. 363 :

ஆரும் வெதிரும் சாரும் பீரும்

மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும்

(68)
 

க-து :

ரகார ஈற்றுள்  ஒருசார்  சொற்களுக்கு  மெல்லெழுத்து   மிகும்
என்கின்றது.
 

பொருள் :  ஆர்,   வெதிர்,    சார்,  பீர்    என்னும்    பெயர்கள்
வல்லெழுத்துவரின்  அவற்றின் கிளைமெல்லெழுத்துமிகுதல் பொருள் பெறத்
தோன்றும்.
 

எ. டு:ஆர்ங்கோடு - வெதிர்ங்கோடு, சார்ங்கோடு, பீர்ங்கொடி, செதிள்,
தோல், பூ எனவரும்.
 

‘‘மெய்பெற’’  என்றதனான் கூர்ங்கதிர், ஈர்ங்கோதை எனப்பிற சொற்கள்
சிறுபான்மை மெல்லெழுத்துப் பெறுதல் கொள்க.
 

இனி, ஆரங்கண்ணி என்பது ஆராகிய அழகிய கண்ணி எனப் பொருள்
கோடற்கும் ஏற்பதாகலின் ஆர்  அம்முச் சாரியை பெறும் என உரையாளர்
கூறுவது  நிரம்பாதென்க.  மற்றும்  ஆவிரங்கோடு, துவரங்கோடு என்பவை
ஐகார  ஈறு  எனற்கும் ஏற்குமாகாலான் அவை ஈண்டைக்காகா என்க. ரகர
ஈறாயின் புறனடையாற் கொள்ளத்தகும்.
 

சூ. 364 :

சாரென் கிளவி காழ்வயின் வலிக்கும்
(69)
 

க-து :

சார் என்னும் சொற்கு ஒருவழி எய்தியது விலக்குகின்றது.
 

பொருள்:  சார்  என்னும்  சொல் காழ்  என்பதனொடு புணருமிடத்து
வல்லெழுத்துமிகும்.
 

எ.டு :சார்க்காழ் எனவரும் (காழ்-வித்து)
 

சூ. 365 :

பீர்என் கிளவி அம்மொடு்ஞ் சிவணும்
(70)
 

க-து :

பீர் என்னும் சொற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
 

பொருள் :  பீர்   என்னும்  சொல்   மெல்லெழுத்து  மிகுதலேயன்றி
அம்முச்சாரியையொடும் பொருந்திப்புணரும்.
 

எ.டு :  பீரங்கொடி,   செதிள்,   தோல்,  பூ  எனவரும்.  உம்மையை
எச்சமாக்கி  அதனொடு அத்து  வருதலும்  கொள்க. ‘‘மாரிப்பீரத்து அலர்’’
எனவரும்.
 

சூ. 366 :

லகார இறுதி னகார இயற்றே
(71)
 

க-து :

லகார ஈற்று வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாமாறு கூறுகின்றது.