நூன்மரபு294

பொருள் : லகார ஈற்றுப் பெயர், வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்
னகார  ஈற்று  இயல்பிற்றாகும். அஃதாவது  வல்லெழுத்துவரின்  றகரமாகத்
திரியும் என்றவாறு.
 

எ. டு:  கற்குறை,  சிறை, தலை,  புறம்  எனவும் கடற்கரை, கடற்சுழல்,
கடற்றிரை, கடற்படகு எனவும் வரும்.
 

சூ. 367 :

மெல்லெழுத் தியையின் னகர மாகும்
(72)
 

க-து :

லகரஈறு மெல்லெழுத்தொடு புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :  லகர  ஈற்றுச் சொற்கள்  வருமொழி மெல்லெழுத்து வரின்
னகரமாகத் திரியும்.
 

எ.டு :கன்ஞெரி, கன்னுனி, கன்முரி, கடன்ஞாலம், கடன்மா எனவரும்.
  

சூ. 368 :

அல்வழி யெல்லாம் உறழென மொழிப
(73)
 

க-து :

லகார ஈற்று அல்வழிப் புணர்ச்சியாமாறு கூறுகின்றது.
 

பொருள் :  லகார     ஈற்றுப்      பெயரெல்லாம்    அல்வழிக்கண்
வல்லெழுத்துவரின்  திரிபும்   இயல்புமாக  உறழ்ந்து முடியுமெனக் கூறுவர்
புலவர்.
 

எ. டு:   கல்குறிது - கற்குறிது,   சிறிது,   தீது,  பெரிது   என வரும்.
மொழியாததனையும்   முட்டின்று    முடித்தல்    என்னும்    உத்தியான்
மென்கணம்வரின் னகரமாகத் திரியுமெனக் கொள்க. எ.டு : கன் ஞெரிந்தது,
நீண்டது, மாண்டது, விரன்மெலிந்தது எனவரும்.
 

‘எல்லாம்’  என்றதனான்  கூறுமாற்  சிறிதே, வந்தானாற் கொற்றன் என
அசையிடைச் சொல்லின்  லகரம்  உறழாது  திரிந்தே   வருதல்  கொள்க.
உரையாளர்   அத்தாற்   கொண்டான்,   இத்தாற்   கொண்டான்   எனத்
திரிந்ததெனக் காட்டுவர். அவை அதனான், இதனான் என்னும் னகர ஈற்றுச்
சொற்களாதலின் ஈண்டைக்கு எய்தா என்க.
 

சூ. 369 :

தகரம் வரும்வழி ஆய்தம் நிலையலும்

புகரின் றென்மனார் புலமை யோரே

(74)
 

க-து :

லகரம் ஆய்தமாகத் திரியுமிடங் கூறுகின்றது.
 

பொருள் :  லகர   ஈற்றுச்   சொல்   வருமொழி  தகரமாகியவிடத்து
ஆய்தமாகத்திரிந்து  நிற்றலும் குற்றமின்றென்பார். உம்மை இறந்தது தழீஇய
எச்ச உம்மை.