நூன்மரபு297

சிறுமை,   தீமை,  பெருமை  எனவும் வல்லுஞாற்சி, நீட்சி, மாட்சி எனவும்
இருவழியும் வரும்.
 

சூ. 374 :

நாயும் பலகையும் வரூஉங் காலை

ஆவயின் உகரம் கெடுதலும் உரித்தே

உகரங் கெடுவழி அகரம் நிலையும்

(79)
 

க-து :

வல்லென்னும் சொற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
 

பொருள் :  மேற்கூறிய  வல்லென்னும் சொன்முன்னர்  நாய்,  பலகை
என்னும்   சொற்கள்   வந்துபுணரின்,  அவ்விடத்து   மேற்கூறிய  உகரங்
கெடுதலும்   உரித்தாகும்.   உகரம் கெடுமிடத்து  ஆண்டு  அகரம்  வந்து
நிலைபெறும்.
 

எ. டு:  வல்லநாய், வல்லப்பலகை  எனவரும். உம்மையான் வல்லுநாய்,
வல்லுப்  பலகை  எனவும்  வரும். நாய்  என்பது சூதுஆடும் கருவியாகிய
காய்களை. இவை  வல்லினுள் நாய் எனவும்  வல்லுக்குரிய பலகை எனவும்
விரியும்.
 

சூ. 375 :

பூல்வேல் என்றா ஆல்என் கிளவியொடு

ஆமுப் பெயர்க்கும் அம்இடை வருமே

(80)
 

க-து :

சில லகரஈற்றுப்பெயர் அம்முச்சாரியை பெறுமென்கின்றது.
 

பொருள்பூல்,  வேல்,  ஆல் என்னும்  அம்மூன்று   பெயர்கட்கும்
அம்முச்சாரியை இடையே வரும்.
 

எ. டு:  பூலங்கோடு,  வேலங்கோடு, ஆலங்கோடு - செதிள், தோல், பூ
எனவரும். இவை மூன்றும் மரப்பெயர்.
 

வருமொழி வரையாமையான்  பூலஞெரி,  வேலஞெரி, ஆலஞெரி-நிழல்,
முறி,   விறகு    என   ஏனைக்கணத்தும்   அம்முப்  பெறுதல்  கொள்க.
பூலாங்கோடு,  பூலாங்கழி என  ஆம்சாரியையும் வருமென்பார் உரையாளர்.
அஃது    வழூஉவழக்காகலின்    ஏலாது.     சான்றோர்    வழக்காயின்
வழுவமைதியாகப் புறனடைப் பாற்படுத்துக் கொள்க.
 

சூ. 376 :

தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல
(81)
 

க-து :

லகர ஈற்றுத் தொழிற் பெயர்கட்குரிய விதி கூறுகின்றது.
 

பொருள் : லகார ஈற்றுத்   தொழிற்பெயர்  எல்லாம் ஞகார  ஈற்றுத்
தொழிற்  பெயரியல்பினவாம்.  அஃதாவது  உகரம்  பெற்று  வல்லெழுத்து
மிகுதலும், ஞநம வரின் இயல்பாதலுமாம்.