நூன்மரபு298

எ. டு:  வெல்லுக்கடிது;   புல்லுக்கடிது;  கொல்லுக்கடிது,   சிறிது, தீது,
பெரிது  எனவும்;  வெல்லு  ஞான்றது, நீண்டது,  மாண்டது எனவும் வரும்.
கடுமை, சிறுமை, பெருமை, ஞாற்சி, நீட்சி, மாட்சி என வேற்றுமைக்கண்ணும்
ஒட்டிக் கொள்க.
 

இனிப்,  பின்னல்  கடிது,  துன்னல் கடிது  என்பவை  பின்னற்  கடிது,
துன்னற்கடிது எனப்  பொதுவிதி  பெற்று  வருவதனை  ‘எல்லாம்’ என்னும்
மிகையாற்  கொள்க என்பார் உரையாசிரியர். அவை  பின், துன்  என்னும்
னகர ஈறு அல்லென்னும் தொழிற்பெயர்  விகுதி  பெற்று  நிற்பனவாதலின்
லகர ஈறாதற்கு ஏலா என்க.
 

சூ. 377 :

வெயிலென் கிளவி மழையியல் நிலையும்
(82)
 

க-து :

வெயில் என்னும் சொற்குச் சிறப்பு விதி கூறுகின்றது.
 

பொருள் வெயில்  என்னும்  பெயர், மழை என்னும் சொற்கு ஓதிய
இயல்பிற்றாய் அத்தும் இன்னுமாகிய சாரியை பெற்றுப் புணரும்.
 

எ. டு: வெயிலத்துக் கொண்டான்;  வெயிலிற் கொண்டான், சென்றான்,
தந்தான்,  போயினான்,  ஞான்றான்,   நின்றான்,    மீண்டான்,  வந்தான்
எனவரும்.
 

அத்துச்   சாரியையும்   இன்   சாரியையும்   ஒருங்கு   மாட்டேற்றிக்
கூறினமையான் ‘‘அத்தே வற்றே’’ என்னும் சூத்திரத்தாற் கூறிய நிலைமொழி
ஒற்றுக்கேடு   இதற்கு  எய்தாதாயிற்று.  ‘இருள்’   என்னும்   கிளவிக்கும்
இவ்விளக்கம் ஒக்கும்.
 

சூ. 378 :

சுட்டு முதலாகிய வகர இறுதி

முற்படக் கிளந்த உருபியல் நிலையும்

(83)
 

க-து :

வகர ஈற்றுப்  புணர்ச்சி  விதி  கூறுவான்  தொடங்கி அவ்  ஈறு
நான்கே  சொற்களில் வருதலின்  அவற்றை  விதந்து  கூறுவார்.
வகர  ஈற்றுச் சுட்டுப் பெயர் மூன்றும்  உருபுபுணர்ச்சிக்கு  ஓதிய
இயல்பினவாய் நிலைபெறும் என்கின்றார்.
 

பொருள் :சுட்டெழுத்துக்களை முதலாக உடைய  வகர ஈற்றுச் சுட்டுப்
பெயர்,  முன்னர்க்கிளந்தோதிய  உருபு   புணர்ச்சிக்குரிய   இயல்பினவாய்
நிற்கும். அஃதாவது; வற்றுச் சாரியை பெற்றுப் புணரும் என்றவாறு.
 

எ. டு:  அவற்றுக்கோடு, இவற்றுக்கோடு,  உவற்றுக்கோடு; செவி, தலை,
புறம் எனவும்; அவற்று ஞாற்சி, நீட்சி, மாட்சி, வன்மை எனவும் வரும்.