நூன்மரபு299

முற்படக்   கிளந்த   என்றதனான்  வற்றொடு இன்சாரியையும் ஒருங்கு
பெற்று   அவற்றின்  கோடு,  இவற்றின்  கோடு,  உவற்றின்  கோடு என
வருதலும் கொள்க.
 

சூ. 379 :

வேற்றுமை அல்வழி ஆய்த மாகும் 
(84)
 

க-து:

சுட்டுப் பெயரின் வகரம் அல்வழியாற் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்  :  சுட்டுப்    பெயரின்    வகர    ஈறு   அல்வழிக்கண்
வல்லெழுத்தொடு புணருமிடத்து வகரந்திரிந்து ஆய்தப் புள்ளியாய் நிற்கும்.
 

எ. டு:  அஃகடிய,  இஃகடிய,  உஃகடிய- சிறிய, தீய, பெரிய எனவரும்.
புணர்மொழி   ஆய்தம்  என்பது  தவறான கொள்கை என்பது இதனானும்
விளங்கும்.
 

சூ. 380 :

மெல்லெழுத் தியையின் அவ்வெழுத் தாகும்  
(85)
 

க-து :

சுட்டுவகரஈறு மெல்லெழுத்தொடு புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :  வகர ஈற்றுச் சுட்டுப் பெயர் மெல்லெழுத்தொடு இயையின்
வந்த மெல்லெழுத்தாகத் திரியும்.
 

எ. டு:  அஞ்ஞாண்கள்,   அந்நூல்கள்,   அம்மலர்கள்   என  வரும்.
நிலைமொழி,  பன்மைச்  சொல் என்பது  விளங்க  வருமொழி ஈற்றின்கண்
கள்விகுதி  கூட்டிக்கூறுதல் தகவுடைத்தென்க. என்னை? அ, இ, உ என்னும்
சுட்டுக்களொடு  மெல்லெழுத்துப்  புணரினும்  அவையும் அந்நூல்  என்றே
வருமாதலின் என்க.
 

சூ. 381 :

ஏனவை புணரின் இயல்பென மொழிப
(86)
 

க-து :

சுட்டு  வகர  ஈறு  இடைக்கணத்தொடும்   உயிர்க்கணத்தொடும்
புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :  வகர   ஈற்றுச்    சுட்டுப்    பெயர்கள்  வல்லெழுத்தும்
மெல்லெழுத்தும்    அல்லாத   ஏனைய   இடைக்கணத்தொடும்   உயிர்க்
கணத்தொடும் புணரின் திரிபின்றி இயல்பாகும் என்று கூறுவர் புலவர்.
 

எ. டு:  அவ்யாழ்கள்,    இவ்யாழ்கள்,  உவ்யாழ்கள்,  அவ்வட்டுக்கள்,
அவ்வணிகள் எனவரும். ஏனையவற்றொடும் ஒட்டிக் கொள்க.
 

சூ. 382 :

ஏனை வகரம் தொழிற்பெய ரியற்றே
(87)
 

க-து :

‘தெவ்’ என்னும் வகர ஈறு புணருமாறு கூறுகின்றது.