முன்னுரை5

எழுத்தொலிகளாக  (ஒலியன்களாக)  வகுத்து மேற்கூறிய  957 ஒலிகளையும்
அடக்கியுள்ளனர்.  மற்றும்  உயிரிசையைக்  குறுமை  நெடுமை   எனவும்,
ஒற்றொலிகளை  வன்மை  மென்மை  இடைமை  எனவும்  வகுத்துள்ளனர்.
மேலும், வடிவு கொள்ளும் மெய்கள் ஒலியாமையான், அவை  புள்ளியுற்றும்
உயிர்ப்புற்றும்  ஒலிக்கும் என்பதை  ஓர்ந்து  மெய்எழுத்து மொழிமுதற்கண்
வாரா  என  விதித்தனர்.   தொடரொலிகளைத்  துணித்து ஓரெழுத்தொரு
மொழி ஈரெழுத் தொருமொழி  தொடர்மொழி  எனப்   பாகுபாடு  செய்து
கொண்டனர்.
  

இவ்வாறே  சொல்லிலக்கணங்களுள்ளும்   பொருளிலக்கணங்களுள்ளும்
அமைத்துக்  கொண்ட  மரபுகள்    பல.     அதனான்     எழுத்தொலி
இலக்கணங்களைக்   கூறும்  முதலியலுக்குத்  தொல்காப்பியர்    நூன்மரபு
எனப் பெயரிட்டு  முதற்சூத்திரத்திலேயே  ‘‘என்ப’’  என மரபினைச் சுட்டி
உணர்த்தினார்.  தொல்காப்பியத்துட்  கூறப்பெறும்  இலக்கணம்    யாவும்
தமிழ்மரபிற்குரியவை   என்பது   தோன்ற,   நூன்மரபு  எனத் தொடங்கி,
மரபியல் என முடித்துக் காட்டினார்.
  

தமிழ்மரபினையும்  தொல்காப்பியநெறியையும்  ஓர்ந்துணராது   எழுந்த
உரைகளும்  அவ் உரைகளை  ஒட்டியும் வடநூன் முறையினைத் தழுவியும்
எழுந்த பின் நூல்களும் தமிழ் இலக்கணம் என்னும் பெயரால்  நிலவுவதும்,
அவற்றைத் தமிழ் மக்கள் பயிற்றுவதும்  பயில்வதும்  தமிழர்தம்  அல்லூழ்
என்பது தவிரப் பிறிதொன்றும் ஈண்டு விரிப்பதற்கில்லை.
  

ஒருமொழியை  இலக்கணமுறைமையாற்  செம்மைசெய்வதன்  நோக்கம்,
அம்மொழியை வழங்கும் மக்களின் சோர்வானும் வட்டார வழக்குக்களானும்
பிறமொழித்     தாக்கத்தானும்    அது       சிதைந்து      விடாமல்,
நிகழ்காலச்சான்றோர்தம் கருத்துக்களை  எதிர்கால   மக்கள்    திரிபின்றி
உணர்ந்துகொள்ளச் செய்தல் வேண்டுமென்பதேயாம்.
  

அதனான்  இலக்கணநூல்  யாத்த  தொல்லாணை    நல்லாசிரியன்மார்
வழங்கிவரும் இருவகை வழக்கினை நோக்கி மட்டும் வரையறை செய்யாமல்
நிலைபேறுடைய இலக்கியங்கள்  தோன்றுதற்குரிய  நெறிகளையும்  எண்ணி
அமைத்து விதி செய்து போந்தனர். இதனை  ‘‘நாடக வழக்கினும் உலகியல்
வழக்கினும் பாடல் சான்ற புலனெறி  வழக்கம்’’ என்பதனான் உணரலாகும்.
செய்யுள் செய்தற்கு  முப்பத்துநான்கு  வகை   உறுப்புக்கள்   கூறியதற்குக்
காரணமும் அதுவேயாம்.