தமிழுக்குரிய அடைமொழிகளுள் முத்தமிழ் என்பதும் ஒன்று. அஃதாவது உயர்ந்தோர்வழக்காய்த் தமிழ் உரியடியாகத் தோன்றிய சொற்கள் யாவும் இயல் இசை மெய்ப்பாடு என்னும் முக்கூறுகளும் உடையவாய்ப் பலுக்குதற்கு எளிமையும் கேட்பதற்கு இனிமையும் பன்னுதற்கு நறுமையுமாக, வகுத்துக் கொண்ட ஓசை ஒலிகளையே எழுத்தாகக் கொண்டு உருவாகிச் செவிப்புலனாக வந்து இசை நிரப்பிச் சிந்தைக்குப் பொருளை அறிவிப்பதுடன், உள்ளத்தைத் தொட்டு மெய்ப்பாட்டுணர்வையும் எழுப்பும் பெற்றிமையும் உடையவை. ஆதலின் ஒவ்வொரு சொல்லும் இயல் இசை மெய்ப்பாடு என்னும் முக்கூறுகளையுடையது என்பதே அவ்அடைமொழியின் கருத்தாகும். |
இயல் இசை நாடகம் என்னும் கலைப்பிரிவு எல்லா மொழிகட்கும் உரியவையாகலின், அதனைப் பொருளாகக் கோடல் தமிழின் இத் தன்மையைப் புலப்படுத்தாதென்க. |
இவ்வியல்புகளையெல்லாம் ஓர்ந்துணர்ந்த ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியனார், முந்துநூல்களைமட்டும் நாடிக் கை வந்தவரை கற்றுத் தாமே ஓர் இலக்கணநூலைச் செய்ய முற்படாமல், வடவேங்கடம் தென்குமரி ஆயிடை வாழும் மக்களின் இருவகைவழக்குக்களையும் உடனுறைந்தும் ஊடுருவியும் ஆராய்ந்து தேர்ந்து, அவற்றை முறைப்பட எண்ணி, மயங்காமரபின் எழுத்துமுறை காட்டிப் போக்கறுபனுவலாகத் தன்நூலைத் தொகுத்தளித்துள்ளார். |
எனவே, தமிழ்மொழியின் மரபையும் இயல்பையும் போக்கின்றிப புலங்கொள்ள விழையும் மாணாக்கர், தொல்காப்பிய நூற்பாக்களையே பல்காலும் நோக்கிச் சிந்தித்து உணர்தல் கடப்பாடாகும். |
இடைக்காலத்தெழுந்த உரைகளும் வழிநூல்களும், தொல் காப்பியத்தை அறியத் துணைபுரிவனவேயன்றி, அதனை அறிவிப்பன அல்ல. இக்கால, இடைக்கால ஆய்வுரைகட்கும் இக் காண்டிகையுரைக்கும் மேற்கூறிய கருத்து ஒக்கும். |
பழைய உரைகள் இருக்க, இப்புத்துரையை யான் வரைந்ததற்குக் காரணம், பழைய உரைகள் பெரும்பாலும் இப்பாரதநாட்டில் வழங்கும் மொழிகள் யாவும் பிராகிருதங்களே. அவற்றிற்குத் தாயும் வழிகாட்டியும் சமற்கிருத (வட) மொழியே |