என்னும் அடிப்படையில் வரையப்பட்டனவாக உள, எனவும் இளம்பூரணர் தவிர்த்த ஏனைய உரையாசிரியன்மார், வடமொழியிலக்கணக் கோட்பாடுகள் மட்டுமன்றி வேத வேதாங்கங்களுக்கு ஒப்பவே உரைகாணும் நோக்குடையராயினர், எனவும் கண்டமையேயாம். வீரசோழியம் முதலாய இடைக்கால இலக்கண நூல்களும் அக்கோட்பாட்டினவேயாகும். | தமிழ்மொழி ஆரியக்குடும்பமொழியினின்று வேறுபட்டது, தனித் தன்மையுடையது, தென்னக மொழிகட்கெல்லாம் அடிப்படையானது என்பது உரையாசிரியன்மார்காலத்து விளக்கமாகவில்லை. இக்கால ஆய்வாளர்கட்குத் தமிழ்மொழி (ஆரிய) வடமொழியினின்று வேறுபட்டது என்பது தெரியுமேனும், அவர்களும் மேலையாரிய மொழிகளின் கோட்பாடுகளின் அடிப்படையிலேயே ஆராய்ந்து முடிவுகாணும் நிலையில் உள்ளனர். | இவ்வுரையின் நோக்கம் தமிழ்மொழி, தென்மொழிக் குடும்பத்தின் தாய், தனித் தன்மையுடையது. பழந்தமிழ் இலக்கணக் கோட்பாடு இம்மொழிக்கே உரிய மரபுகளின் அடிப்படையில் அமைந்தது என்னும் மெய்ம்மைகள் ஓரளவு என் சிற்றறிவிற்குப் புலப்பட்டமையான், வருங்கால மாணவர் உலகம் இவ் அடிப்படையில் சிந்தித்துத் தமிழின் செம்மையினை உலகுக்கு உணர்த்த வேண்டும் என்பதாகும். | இவ்வுரையைப் பழைய உரையாசிரியன்மார்உரைகளின் செறிவையும் நுட்பத்தையும் பயின்று நோக்கி, இக்கால ஆய்வாளர்தம் கருத்துக்களையும் ஓரளவு தெரிந்து, தொல்காப்பியநெறிக்கு ஒக்கும் எனக் கருதியவற்றை ஏற்றுக்கொண்டு, மொழியாக்கமரபினையும் மொழிவரலாற்றையும் எண்ணிச் சமற்கிருதக் கோட்பாடுகள் மிகுதியும் கலவாதவை என வழங்கும் இலக்கியங்களைத் துணைக்கொண்டு, இச்சூத்திரம் எதைப் பற்றிக் கூறுகின்றது? எதற்காக இவ்வாறு கூறுகின்றது? கூறாவிடின் வரும் குறை யாது எனவும் இவ்விதி முன்னும் பின்னும் உள்ள இலக்கணங்களொடு இயைபு படுகின்றதா எனவும் மூல பாடம் சிதையாமல் உளதா, பாடவேறுபாடுகள் உண்டா எனவும் ஆராய்ந்து இஃது அறிவியலுக்கு ஒத்துள்ளதா எனவும் பலகால் நடுவு நின்று சிந்தித்து வரையலானேன். | பழைய உரையாசிரியன்மாரிடத்துக் கொண்ட மதிப்பினான் அவர்தம் நடையையே பெரும்பான்மையும் மேற்கொண்டு, இவ்வுரை வரையப்பட்டுள்ளது. |
|
|