8முன்னுரை

உரையாசிரியன்மார்      பெரும்பான்மையும்,        நூலாசிரியரின்
நோக்கினையும் கருத்தினையும் புலப்படுத்தும் எண்ணமின்றி,  வழங்கிவரும்
இலக்கியங்களுக்கு   ஏற்பக்    கூறுவதிலும்    வடநூற்  கருத்துக்களொடு
மாறுபடாமற் கூறுவதிலும், தாம் தாம் மதிக்கும் சமயக்கோட்பாடுகளை இதன்
வாயிலாகப்        புலப்படுத்துவதிலும்      தமது        ஆழ்ந்தகன்ற
நுண்மாண்நுழைபுலத்தைக்      காட்டுவதிலும்,    வேட்கையுடையாராய்த்,
தமிழ்மொழியின் தனித்தன்மையினையும் அறிவியலையும் புறக்கணித்து உரை
கூறியுள்ளனர் என்பது என் கருத்தாகும்.
  

மேலும்,    பயின்றறிதற்கு      அருமைப்பாடுடையதாகத் தத்தமக்குள்
முரணியும்    திரிந்தும்  அமைந்துள்ள  அவ்வுரைகளான் தமிழ்இலக்கணம்
என்றாலே    மாணாக்கர்  உள்ளத்தில்  ஒருவகை  அச்சமும்  வெறுப்பும்
வளர்ந்து, இலக்கணத்தையே புறக்கணிக்கும்  நிலை  வளர்ந்து  வருகின்றது.
பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் நிலையும் ஏறத்தாழ அவ்வாறே உளது.
  

இச்சூழ்நிலையைப்    பயன்படுத்திக்கொண்டு    ஒருசாரார்,   தமிழின்
தனித்தன்மையைக்     காட்டும்   தொல்காப்பியமரபினை    அழித்துவிட
மறைமுகமாகச்   சூழ்ந்து,   வளரும்  மொழிக்கு இலக்கணம் ஒருசிறையாக
அமையக்கூடாது   என்று    நல்ல   போலவும் நயவ போலவும் பேசியும்
எழுதியும் வருதலான். நிகழ்கால -   எதிர்கால -    மாணாக்கர்  சிந்தித்து
ஆவனபுரியத் தூண்டுவதும் இவ்வுரையின் நோக்கமாகும்.
  

ஒரு  மொழி  செம்மையான இலக்கண மரபுகளைப் பெற்றிருக்குமாயின்,
அம்மொழிபேசுவோர்   அழிந்தாலும்,    அம்மொழி   அழியாது. (தமிழும்
சமற்கிருதமும்   இதற்குச்   சான்றாகும்.)   ஒரு  மொழியின்   இலக்கணம்
சிதையுமானால், அம்மொழி சிதைதலொடு  அதற்குரிய மக்களும்  சிதைந்து
திரிபுறுவர்.      தமிழ்       மொழியிலக்கணம்     அறிவியலொடுபட்ட
செம்மையுடையதாகும்.       அதனைத்      திரிபின்றி      விளக்குவது
தொல்காப்பியம்மட்டுமேயாம்.    தொல்காப்பியம்    என்னும்  கண்ணாடி,
ஒவ்வாவுரைகளாகிய   புகைசூழ்ந்து,  மொழியின் உண்மையான பாங்கினை
அறிய  ஒட்டாமல்  கிடக்கின்றது.  அம்மாசுகளைத்   துடைத்துக்    காண
வேண்டியது   தமிழ்மக்கள்  கடனாகும். அக்கடமையுணர்வினைத் தூண்டும்
விருப்பினால், எனது சிறுமையையும் அறிவாற்றல் குறையினையும் கருதாமல்,
இச்சிற்றுரையை    வரையலானேன். நல்லிசைச் சான்றோர்   இவ்வுரையிட்
காணுங் குறைகளைத் தக்க சான்றுகளான் செம்மை செய்து தவப்பணிவோடு
வேண்டிக்கொள்கிறேன்.ச. பாலசுந்தரம்