தொல்காப்பிய எழுத்தியற்கோட்பாடுகள் |
பண்டைய உரையாசிரியன்மார்கொள்கையொடும் நன்னூல் முதலிய இடைக்காலவிலக்கணநூற்கொள்கையொடும் அடிப்படையில் இச் சிற்றுரையின் கோட்பாடுகள் வேறுபடலானும், அக்கொள்கைகள் உரையுள் சேய்த்தும் அணித்துமாகப் பல்வேறிடங்களில் ஓரளவே விளக்கப்படலானும், இவ்வுரையைப் பயிலும் மாணாக்கர் ஐயந் திரிபுகளின்றிப் பயிலுவதற்குத் துணையாகத், தொல்காப்பிய நூற்பாக்களின் அடிப்படையில் இவ் எழுத்திலக்கணக் கோட்பாடுகள் சுருக்கமாகத் தரப்பெற்றுள்ளன. |
எழுத்து ஓசையும் எழுத்தும்:- |
எழுத்தொலிகள் மூலாதாரத்தின்மேல் அமைந்துள்ள நாததத்துவம், சிதாகாசம் என்னும் உச்சி நடுவின் உணர்வினான் தூண்டப் பெற்றுக் கிளர்ந்து, உயிர்க் காற்றினது (பிராணன்) ஓசையாய் வளியொடு கூடி இசைமயமாய், உந்தியில் நிலை கொள்ளும் என்பது யோகநூல் முடிபாகும். |
அவ்வளியிசை, சிந்தையில் நிகழும் கருத்துக்களைத் தனக்கு அகநிலையாகவும் பிறர்க்கு அவர்தம் செவிவாயிலாகப் புறநிலையாகவும், அறிவிக்கும் முறைமையில் உருப்பெற்று நிகழும். இவற்றை முறையே ‘‘அகத்தெழு வளியிசை’’ என்றும், ‘‘எழுந்துபுறத் திசைக்கும் மெய்தெரி வளியிசை’’ என்றும் இவ்வாசிரியர் கூறுவர். |
அகத்தெழு வளியிசை உள்ளுணர்வுடைய ஞான யோகியருக்கே புலனாகும். புறத்தெழுவளியிசை செவிப்பழுதில்லா மக்கள் யாவர்க்கும் புலனாகும். எனவே வளியிசைக் கூறுகள் இருதிறத்தனவாகும் எனத் தொல்காப்பியம் புலப்படுத்துகின்றது. (பிறப்பியல்-20) |
இவ் இருவகையுள், புறத்தெழு வளியிசை முயற்சியானும் வாயுறுப்புக்களின் செயற்பாட்டானும் பல்வேறுவடிவுகொண்டு நிகழும். அகத்தெழு வளியிசைஎழுத்தின் அளவும் பயனும் அறிவோர் நிறைமொழிமாந்தர் - புறத்தெழுவளியிசை எழுத்தின் அளவும் பயனும் யாவரானும் அறிதற்குரியவாம். |
புறத்தெழுவளியின் நாதம் (உயிர்ப்பு), இசை (ஒற்று), ஒலி (அஃகு) ஓசை என முத்திறப்படும். இவை முறையே உயிரெழுத்துக்களையும் குற்றியலிகரக்குற்றியலுகரங்களையும், |