குவித்துக் கூறும்வழி வரும் முற்றுகரத்தோடு அவ்விடத்துக் குற்றுகரம் பொருள் வேறுபடுமாறுபோல ஈண்டுப் பொருள் வேறுபட்டு நில்லாது என்றவாறு. |
காது கட்டு கத்து முருக்கு தெருட்டு என்பன முற்றுகரமும் குற்றுகரமுமாய்ப் பொருள் வேறுபட்டு நின்றாற்போல நுந்தை யென்று இதழ்குவித்து முற்றக்கூறியவிடத்தும் இதழ்குவியாமற் குறையக் கூறியவிடத்தும் ஒருபொருளே தந்தவாறு காண்க. நுந்தாயென்பதோவெனின் அஃது இதழ் குவித்தே கூறவேண்டுதலிற் குற்றுகரமன்று. இயலென்றதனான் இடமும் பற்றுக்கோடும் இரண்டிற்கும் வேறுபாடின்றென்று கொள்க. இதனானே மொழிக்கு முதலாமெழுத்துத் தொண்ணூற்றுநான்கென்று உணர்க. |
(35) |
69. | உயிர்ஒள வெஞ்சிய விறுதி யாகும். |
|
இஃது உயிர்மொழிக்கு ஈறாமாறு கூறுகின்றது. |
இதன் பொருள்: உயிர் ஒள எஞ்சிய இறுதியாகும் - உயிர்களுள் ஒளகாரம் ஒழிந்தனவெல்லாம் மொழிக்கு ஈறாம் என்றவாறு. |
எனவே, ஒளகாரவுயிர் ஈறாகாதாயிற்று. இஃது உயிர்க்கும் உயிர்மெய்க்கும் பொது. |
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ என இவைதாமே ஈறாயின. ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஓஒ எனக் குறிலைந்தும் அளபெடைக்கண் ஈறாயின. கா தீ பூ சே கை கோ எனவும், விள கிளி மழு எனவும் வரும். எகர ஒகரம் மேலே விலக்குப. 'அளபெடை மிகூஉ மிகர விறுபெயர்' (சொல் - 125) என்பாராதலின், 1அளபெடைப் பின்வந்த குற்றெழுத்துங் கொள்வர் ஆசிரியரென்று உணர்க. நெட்டெழுத்தேழும் முதன் மொழியா மென்னுந் துணையே முன்னுணர்த்துதலின் ஈண்டு அவை ஈறாமென்றும் உணர்த்தினார். |
| (36) |
|
1. அளபெடைப் பின்வந்த குற்றெழுத்துங் கொள்வரென்றது, 'அளபெடை மிகூஉ மிகர விறுபெயர்' என்ற சூத்திரத்துள் அளபெடை யெழுத்தாக வரும் இகரத்தை, இகர விறுபெயரென்று ஆசிரியர் கொண்டமையை. |