தொல்காப்பிய மென்னும் இப்பேரிலக்கண நூலைச் செய்த தொல்காப்பியர், சமதக்கினி முனிவர் புதல்வர் என்பதும், இவரியற்பெயர் திரணதூமாக்கினியார் என்பதும் இந் நூற்பாயிரத்துள் "சமதக்கினியாருழைச்சென்று அவர் மகனார் திரணதூமாக்கினியாரை வாங்கிக்கொண்டு," என்று நச்சினார்க்கினியர் கூறுதலானே அறியக்கிடக்கின்றன. இன்னும், அப்பாயிரத்துள் 'தொல்காப்பியன்' என்பதற்குப் 'பழைய காப்பியக் குடியிற் பிறத்தலின் தொல்காப்பியன் என்று பெயராயிற்று' என்று கூறுதலானே காப்பியக் குடியிற் பிறந்தவரென்பதும், சமதக்கினி புதல்வ ரென்பதனானே அந்தண குலத்தவ ரென்பதும் அறியத்தக்கன. சமதக்கினி புதல்வரென்றதனானே பரசுராமர் இவர் சகோதரராவா ரென்பதும் பெறப்படும். இராமயணத்துள்ளே பரசுராமர் இராமரோடு போரை விரும்பிச் சென்று அவருக்குத் தோற்றதாகவும், அவருக்கு மிக முந்தினவராகவும் அறியப்படுதலினாலும், இராமராற் சீதையைத் தேடும்படி அனுப்பப்பட்ட குரங்குப்படை இடைச்சங்க மிருந்த கபாடபுரத்தை யடைந்து சென்றதாக அறியப்படுதலினாலும், இடைச்சங்கப் புலவர்களா யிருந்தோர் அகத்தியருந் தொல்காப்பியரும் முதலாயினோர் என்று இறையனா ரகப்பொருளுரை முதலியவற்றா னறியப்படுதலினாலும், தொல்காப்பியரும் இராமர் காலத்துக்கு மிக முந்தியவ ரென்பதும், தொல்காப்பியரிருந்து பல்லாயிரம் யாண்டுகள் சென்றனவென்பதும் அறியத்தக்கன. ஆயினும் இக்காலத்துச் சரித்திர ஆராய்ச்சிக்காரருட் சிலர், மூவாயிரம் ஆண்டு என்றும் ஆறாயிரம் ஆண்டு என்றும் இப்படிப் பலவாறாகக் கூறுகின்றனர். தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பாளர், ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை யவர்கள் அப் பொருளதிகாரப் பதிப்புரையில் பன்னீராயிரம் ஆண்டுகளுக்குக் குறையாதென்று கூறியிருக்கின்றனர். தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய சுப்பிரமணியபிள்ளை யவர்கள் கி.மு. 700 ஆண்டுகளுக்குப் பிற்படா தென்கின்றனர். எவ்வாறு கூறினும் இவர் காலம் 12,000 ஆண்டுகளுக்கு மிக முற்படுமன்றிப் பிற்படாது. |