இதன் பொருள். எல்லா எழுத்தும் பிறப்பின் ஆக்கஞ் சொல்லுங்காலை - தமிழெழுத்து எல்லாவற்றிற்கும் ஆசிரியன் கூறிய பிறப்பினது தோற்றரவை யாங் கூறுமிடத்து, உந்தி முதலாத் தோன்றி முந்து வளி - கொப்பூழடியாகத் தோன்றி முந்துகின்ற உதானனென்னுங் காற்று, தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ - தலையின்கண்ணும் மிடற்றின்கண்ணும் நெஞ்சின்கண்ணும் நிலைபெற்று, பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான் உறுப்புற்று - பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமுமென்ற ஐந்துடனே அக்காற்று, நின்று தலையும் மிடறும் நெஞ்சுங் கூட எட்டாகிய முறைமையையுடைய தன்மையோடு கூடிய உறுப்புக்களோடு ஒன்றுற்று, அமைய - இங்ஙனம் அமைதலானே, வேறுவேறு இயல - அவ் வெழுத்துக்களது தோற்றரவு வேறுவேறு புலப்பட வழங்குதலையுடைய, காட்சி |