இனி, இடைச் சங்கத்தார்க்கு இந் நூல் இலக்கணமாக இருந்ததாக அறியப்படுதலானே முதற்சங்கத் திறுதியில் இத் தொல்காப்பியம் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும் என்பது ஆராய்ந் துணரத் தக்கது. |
இவர் வடமொழியையும் நன்கு கற்றவர் என்பது 'ஐந்திர நிறைந்த தொல்காப்பியன்' என்பதனா னறியத் தக்கது. இவர் அகத்தியரோடு தென்னாடு புக்கபின் அவர்பாற் செந்தமிழ் இலக்கிய விலக்கணங்களைக் கற்று அவருடைய முதன் மாணாக்கராய் விளங்கினர். அகத்தியர்பால் இவருடன் கற்றவர்கள் அதங்கோட்டாசிரியர் பனம்பாரனார் செம்பூட்சேய் வையாபிகர் அவிநயனார் காக்கைபாடினியார் துராலிங்கர் வாய்ப்பியர் கழாரம்பர் நற்றத்தர் வாமனர் என்னும் பதினொருவருமாவர். தொல்காப்பியர் முதலாகப் பன்னிருவர் அகத்தியர் பால் ஒருங்கு கற்றனர் என்பது, |
"மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன் தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த" |
என்னும் புறப்பொருள் வெண்பாமாலைச் செய்யுளாலும், |
"வீங்குகட லுடுத்த வியன்கண்ஞா லத்துத் தாங்கா நல்லிசைத் தமிழ்க்குவிளக் காகென வானோ ரேத்தும் வாய்மொழிப் பல்புக ழானாப் பெருமை அகத்திய னென்னு மருந்தவ முனிவ னாக்கிய முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும்" |
என்னும் பன்னிரு படலச் செய்யுளானு மறியப்படும். |
இவரா லியற்றப்பட்ட இத் தொல்காப்பிய மென்னும் நூலுக்கு உரைசெய்தோராகத் தெரியப்பட்டவர் இளம்பூரணர், கல்லாடர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் என்னும் அறுவராவர். சேனாவரையரும் தெய்வச்சிலையாரும் சொல்லதிகாரத்திற்கு மாத்திரமே உரை செய்தனர். |