பிறப்பியல்109

குற்றமற   நாடிக்   கோடலும்,   அந்தணர்    மறைத்தே -  பார்ப்பாரது
வேதத்து உளதே ; அந்நிலைமை ஆண்டு உணர்க, அஃது இவண் நுவலாது
-  அங்ஙனம்  கோடலை  ஈண்டுக் கூறலாகாமையின் இந் நூற்கட் கூறாதே,
எழுந்து   புறத்து  இசைக்கும் -  உந்தியிற்றோன்றிப் புறத்தே  1புலப்பட்டு
ஒலிக்கும், மெய் தெரி வளியிசை  அளவு  நுவன்றிசினே -  பொருடெரியுங்
காற்றினது   துணிவிற்கே   யான்   மாத்திரை   கூறினேன்;  அவற்றினது
மாத்திரையை உணர்க என்றவாறு.
  

இதனை இரண்டு சூத்திரமாக்கியும் உரைப்ப.
 

இது   பிறன்கோட் கூறலென்னும் உத்திக்கு இனம். என்னை? உந்தியில்
எழுந்த  காற்றினைக்  கூறுபடுத்தி    மாத்திரை     கூட்டிக்   கோடலும்
மூலாதாரம் முதலாகக்  காற்றெழுமாறு  கூறலும்  வேதத்திற்கு  உளதென்று
இவ் வாசிரியர்   கூறி  அம்   மதம்பற்றி   அவர்  கொள்வதோர்  பயன்
இன்றென்றலின்.  உந்தியில்    எழுந்த   காற்று   முன்னர்த்   தலைக்கட்
சென்று  பின்னர்   மிடற்றிலே   வந்து   பின்னர்  நெஞ்சிலே  நிற்றலை
உறழ்ச்சி வாரத்து என்றார். அகத்தெழுவளி யெனவே  மூலாதார  மென்பது
பெற்றாம்.
 

இன் சாரியையை அத்துச் சாரியையோடு கூட்டுக. ஏகாரந் தேற்றம்.
 

மெய்தெரிவளியெனவே 2பொருடெரியா முற்கும் வீளையும் முயற்சியானா
மெனினும் பொருடெரியாமையின் அவை கடியப்பட்டன. எனவே, சொல்லப்
பிறந்து சொற்கு உறுப்பாம் ஓசையை இவர்  எழுத்தென்று  வேண்டுவரென
உணர்க;
 

3'நிலையும் வளியும் முயற்சியு மூன்று
 
மியல நடப்ப தெழுத்தெனப் படுமே.'

  

என்றாராகலின்.
 

(20)
 

பிறப்பியல் முற்றிற்று.


1. புலப்படல் - செவிக்குப் புலப்படல்.
 

2. பொருள்  தெரியா   என்பதற்கு  எழுத்தாகிய  பொருள்  தெரியாத
என்பது பொருள். இன்றேல்,  முற்கும்  வீளையும்  பொருளுணர்த்துமேனும்
என்று இவர் முற்கூறியதோடு மாறுபடும்.
 

3. நிலை என்றது இடத்தை, வளி என்றது  காற்றை.   முயற்சி  என்றது
முயற்சிப் பிறப்பை.