4. புணரியல் |
103. | மூன்றுதலை யிட்ட முப்பதிற் றெழுத்தி னிரண்டுதலை யிட்ட முதலா கிருபஃ தறுநான் கீறொடு நெறிநின் றியலு மெல்லா மொழிக்கு மிறுதியு முதலு மெய்யே யுயிரென் றாயீ ரியல. |
|
என்பது சூத்திரம். மொழிமரபிற் கூறிய மொழிகளைப் பொதுவகையாற் புணர்க்கும் முறைமை உணர்த்தினமையிற் புணரியலென்று இவ்வோத்திற்குப் பெயராயிற்று. ஈண்டு முறைமையென்றது மேற்1செய்கை யோத்துக்களுட் புணர்தற்கு உரியவாக ஈண்டுக் கூறிய கருவிகளை. |
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், மொழிமரபிற் கூறிய மொழிக்கு முதலாமெழுத்தும் மொழிக்கு ஈறா மெழுத்தும் இத்துணை யென்றலும், எல்லா மொழிக்கும் ஈறும் முதலும் மெய்யும் உயிருமல்லது இல்லையென்று வரையறுத்தலும், 2ஈறும் முதலுமாக எழுத்து நாற்பத்தாறு உளவோவென்று ஐயுற்றார்க்கு எழுத்து முப்பத்து மூன்றுமே அங்ஙனம் ஈறும் முதலுமாய் நிற்பதென்று ஐயமறுத்தலும் நுதலிற்று. |
இதன் பொருள்: முதல் இரண்டு தலையிட்ட இருபஃது ஈறு அறுநான்காகும் மூன்று தலையிட்ட முப்பதிற்றெழுத்தினொடு - மொழிக்கு முதலாமெழுத்து இரண்டை முடியிலே யிட்ட இருபஃதும் மொழிக்கு ஈறாமெழுத்து இருபத்துநான்குமாகின்ற மூன்றை முடியிலே யிட்ட முப்பதாகிய எழுத்துக்களோடே, நெறிநின்று இயலும் எல்லா மொழிக்கும் - வழக்கு நெறிக்கணின்று நடக்கும் 3மூவகை மொழிக்கும், |
|
1. செய்கை ஓத்தென்றது பின்வரும் தொகைமரபினையும் உயிர்மயங்கியன் முதலிய மூன்றியல்களையும் நூன்மரபு 1 - ம் சூத்திர விரிவுரை நோக்கி யறிக. ஈண்டு - இப் புணரியலில். |
2. ஈறு - மொழிக்கு ஈற்றில் வருமெழுத்து. முதல் - முதலில் வருமெழுத்து. |
3. மூவகைமொழி - ஓரெழுத் தொருமொழி, ஈரெழுத்தொருமொழி, இரண்டிறந்திசைக்கும் தொடர்மொழி. |