மெய்யே உயிரென்று ஆயீரியல இறுதியும் முதலும் - மெய்யும் உயிருமென்று கூறப்பட்ட அவ்விரண்டு இயல்பினையுடைய எழுத்துக்களே ஈறும் முதலும் ஆவன என்றவாறு. |
இருபத்திரண்டு முதலாவன பன்னீருயிரும் ஒன்பது உயிர்மெய்யும் 1மொழிமுதற் குற்றியலுகரமுமாம். இருபத்து நான்கு ஈறாவன பன்னீருயிரும் பதினொரு புள்ளியும் ஈற்றுக் குற்றியலுகரமுமாம். மெய்யை முற்கூறினார் நால்வகைப் புணர்ச்சியும் மெய்க்கண் நிகழுமாறு உயிர்க்கண் நிகழாவென்றற்கு. |
உதாரணம் : மரம் என மெய்முதலும் மெய்யீறும், இலை என உயிர் முதலும் உயிரீறும், ஆல் என உயிர்முதலும் மெய்யீறும், விள என மெய்முதலும் உயிரீறுமாம். மொழியாக்கம் இயல்பும் விகாரமுமென இரண்டாம். உயிர் தாமே நின்று முதலும் ஈறுமாதல் இயல்பு. அவை மெய்யோடு கூடி நின்று அங்ஙனமாதல் விகாரம். |
(1) |
104. | அவற்றுள் 2மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல். |
|
இது முற்கூறியவாற்றால் தனிமெய் முதலாவான் சென்றதனை விலக்கலின் எய்தியது விலக்கிற்று. |
இதன் பொருள் : அவற்றுள் - முற்கூறிய மெய்யும் உயிருமென்ற இரண்டினுள், மெய்யீறு எல்லாம் புள்ளியொடு நிலையல் - மெய் மொழிக்கு ஈறாயவையெல்லாம் புள்ளி பெற்று நிற்கும் என்றவாறு. |
|
1. மொழிமுதற் குற்றியலுகரம் - நுந்தை. |
2. முதற் சூத்திரத்திலே 'இறுதியு முதலு மெய்யே யுயிரென்றாயீரியல' என்றமையான் மொழிக்கு மெய் முதலாயும் வரும் ஈறாயும் வரும் என்பது பெறப்படுதலின், அவ்விரு மொழிகளுள் ஈற்றில் நிற்கும் வரும் மெய் எப்படி நிற்குமென இச் சூத்திரத்தால் விதிக்கின்றார். ஈற்றில் வரும் மெய்கள் புள்ளிபெற்று நிற்குமெனவே முதலில் நிற்கும் மெய்கள் உயிரோடுகூடிப் புள்ளிபெறாது நிற்குமென்பது பெறப்படும். ஈற்றில் மெய்கள் புள்ளிபெற்று நிற்குமென்றமையானே, உயிர் வருங்கால் தன்மேலேறி முடியவும் இடங்கொடுக்குமென்பதும், ஏனைய மெய்வருங்கால் திரிந்தும் இயல்பாயும் முடியுமென்பதும் பெறப்படு மென்பதும் உரைகாரர் கருத்து. |