புணரியல்121

எனவே,  ஏனைப்  புணர்ச்சிகளுக்கு  இத்துணை  வேறுபாடு இன்றென
உணர்க.
 

உதாரணம் : விளங்கோடு இஃது எழுத்துப் பெற்றது. மகவின்  கை இது
சாரியை பெற்றது. இனி அல்வழிக்கண் விளக்குறிது இஃது எழுத்துப்பெற்றது.
பனையின்குறை இது சாரியை பெற்றது. இதற்குப்  பனை  குறைந்ததென்பது
பொருளாம். இஃது  அளவுப் பெயர்.  ஒழுக்கல்வலிய  வென்றதனான்  இக்
கூறிய   இரண்டும்   எழுத்துஞ்  சாரியையும்  உடன்பெறுதலுங்  கொள்க.
அவற்றுக்கோடென்பது வேற்றுமைக்கண்  இரண்டும் பெற்றது. கலத்துக்குறை
யென்பது     அல்வழிக்கண்       இரண்டும்     பெற்றது.    இதற்குக்
கலங்குறைந்ததென்பது  பொருளாம்.  இயல்புகணத்துக்கண்   இவ்விரண்டும்
உடன்   பெறுதலின்று.   அல்வழி   முற்கூறாதது    வேற்றுமையல்லாதது
அல்வழியென   வேண்டுதலின்.      எழுத்துப்பேறு 1யாப்புடைமையானும்
எழுத்தினாற் சாரியையாதலானும் எழுத்து முற்கூறினார். வேற்றுமை மேலைச்
சூத்திரத்தே கூறுகின்றார்.
 

அல்வழியாவன அவ்வுருபுகள்  தொக்கும் விரிந்தும் நில்லாது புணர்வன.
அவை   எழுவாய்   வேற்றுமை   2ஆறு   பயனிலையோடும்   புணர்ந்த
புணர்ச்சியும்,  விளிவேற்றுமை  தன்பொருளோடு   புணர்ந்த  புணர்ச்சியும்,
முற்றுப்பெயரோடும் வினையோடும் புணர்ந்த  புணர்ச்சியும், பெயரெச்சமும்
வினை


1. யாப்பு - வலி.
 

2. ஆறு பயனிலை என்றது, 'பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல்
- வினைநிலை   யுரைத்தல்   வினாவிற்  கேற்றல் - பண்பு கொள வருதல்
பெயர்கொள   வருதலென்  -  றன்றி யனைத்தும்  பெயர்ப்பய னிலையே'
என்னுஞ்   சொல்லதிகாரச்   சூத்திரத்தாற்  கூறிய ஆறு பயனிலையையும்.
அவற்றிற்கு உதாரணம் முறையே ஆவுண்டு, ஆவாழ்க, ஆவந்தது, ஆயாது,
ஆகரிது,   ஆபல   என்பனவாம்.   பண்புத்தொகை விரிவுழி ஐம்பாலீறாக
விரியும். வினைத்தொகை விரிவுழிச் செய்த  செய்யும்  என்னும்  பெயரெச்ச
வீறாக விரியும். இத் தொகைகள் பிரித்துப்  புணர்க்கப்படா ஒரு சொல்லாய்
நிற்கும். இங்ஙனம் பிரித்துப்  புணர்க்கப்படாவென  ஆசிரியர்  கூறுவதைப்
பலவிடத்துங்  கூறுகின்ற  நச்சினார்க்கினியர்  ஈண்டுப்  பண்புத்தொகையும்
வினைத்தொகையும் விரிந்துநின்றவழிப் புணர்ந்த புணர்ச்சியுமெனக் கூறியது
பொருந்துமோ என்பது ஆராயத்தக்கது.