நச்சினார்க்கினியர் வரலாறு |
செந்தமிழ்ப் புலமையிற் சிறந்து விளங்கிய உரையாசிரியராகிய நச்சினார்க்கினியர் பாண்டிவள நாட்டிலே மதுராபுரியிலே பிறந்தவர். அஃது, "கரைபெற்றதோர் பஞ்சலட்சணமான" என்னும் பாண்டி மண்டல சதகச் செய்யுளானும், "வண்டிமிர் சோலை மதுரா புரிதனி - லெண்டிசை விளங்க வந்த வாசான்" என்னும் உரைப்பாயிரச் செய்யுளடிகளானுந் தெளிவாகும். |
இவர் பாரத்துவாச கோத்திரத்தவர். பார்ப்பன மரபினர். அஃது, இவர் எழுதிய உரைகளின் இறுதியில், "பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்தவுரை முற்றிற்று" எனக் கூறப்படலானும், "மதுரை நச்சினார்க்கினியன் மாமறையோன்" என்னும் உரைப்பாயிரச் செய்யுட்பகுதியானும் உணரப்படும். |
இவர் சமயம் சைவமாகும். "ஓரெழுத் தொருமொழி" (தொல் - மொழிமரபு - கஉ) என்னுஞ் சூத்திர வுரைக்கண், "திருச்சிற்றம்பலம்," "பெரும்பற்றப்புலியூர்" என்னுஞ் சிவஸ்தலங்களின் பெயரைக் குறிப்பிடலானும், தம் முரையகத்துத் திருவாசகம், திருக்கோவையார் முதலிய சைவ நூல்களிலிருந்து மேற்கோள் காட்டலானும், திருமுருகாற்றுப்படை யுரையகத்துக் கூறிய சிலபகுதிகளானும் அது துணிதலாகும். |
இவர் தந்தையார் பெயர் இதுவெனத் துணிதற்குத் தக்க ஆதாரம் யாதுமில்லை. |
இவர் பெயர் நச்சினார்க்கினியர் என்பதாகும். அது சிவ பெருமானுக்குரிய திருநாமங்களு ளொன்றாகக் கருதப்படுகிறது. அக் கூற்றிற்கு, "இச்சையான் மலர்க டூவி யிரவொடு பகலுந் தம்மை - நச்சுவார்க் கினியர் போலு நாகவீச் சுரவனாரே" (திருநா-திருநாகேச்சுரம்-தே.) "நச்சினார்க் கினியாய் போற்றி யெனத்துதி நவிலுங் காலை" (காஞ்சிபுராணம்-சத்ததனா-16) என்பன வாதாரமாம். |
இவர் தமிழ் மொழியை நன்கு கற்றுத்தேறிப் புலமை வாய்க்கப்பெற்றவர். இலக்கண விலக்கியங்களிலன்றி யேனைய கலைகளிலும் நிரம்பியவறிவு படைத்தவர். ஆரியமொழிப் பயிற்சியுமுடையவர். அது, தொல்காப்பிய முதலியவற்றிற்கு இவர் எழுதிய வுரைகளிடையே ஏனைக் கலைகள் சம்பந்தமாக வரும் |