அக்கு ஈறுதிரியுமேனும் உருபுபுணர்ச்சிக்கண் வாராமையின் அதன்பின் வைத்தார். இக்கு முதல்திரியுமேனுஞ் சிறுபான்மைபற்றி அதன்பின் வைத்தார். அன் இன் போலச் சிறத்தலிற் பின்வைத்தார். |
ஆனுருபிற்கும் ஆன்சாரியைக்கும் இன்னுருபிற்கும் இன்சாரியைக்கும் வேற்றுமை யாதெனின், அவை சாரியையான இடத்து யாதானும் ஓர் உருபேற்று முடியும்; உருபாயின இடத்து வேறோர் உருபினை ஏலாவென்று உணர்க, இனி மகத்துக்கை என்புழித் தகரவொற்றுந் தகரவுகரமும் வருமென்று கோடுமெனின். இருளத்துக்கொண்டானென்றால் அத்து எனவே வேண்டுதலின் ஆண்டும் அத்துநின்றே கெட்டதென்று கோடும். அக்கு இக்கு என்பனவும் பிரித்துக்கூட்டக் கிடக்கும். தாழக்கோலென அக்குப் பெற்றுநிற்றலானும் 1ஆடிக்கு என்புழிக் குகரம் நான்கனுருபாகாமையானும் இவை சாரியையாமாறு உணர்க. |
(17) |
120. | அவற்றுள் இன்னி னிகர மாவி னிறுதி முன்னர்க் கெடுத லுரித்து மாகும். |
|
இது முற்கூறியவற்றுள் இன்சாரியை முதல் திரியுமாறு கூறுகின்றது. |
இதன் பொருள்: அவற்றுள் - முற்கூறிய சாரியைகளுள், இன்னின் இகரம் - இன்சாரியையது இகரம், ஆவின் இறுதி முன்னர் - ஆ என்னும் ஓரெழுத்தொருமொழி முன்னர், கெடுதல் உரித்துமாகும் - கெட்டுமுடியவும் பெறும் என்றவாறு. |
உரித்துமாகு மென்றதனாற் கெடாது முடியவும் பெறுமென்றவாறு. இஃது ஒப்பக் கூறலென்னும் உத்தி. |
உதாரணம் : ஆனை ஆவினை ஆனொடு ஆவினொடு ஆற்கு ஆவிற்கு ஆனின் ஆவினின் ஆனது ஆவினது ஆன்கண் ஆவின்கண் எனவரும். |
|
1. ஆடிக்கு என்புழி இக்கு சாரியை. இவ்வியல் 24-ம் சூத்திர நோக்கியறிக. |