125. | அத்தி னகர மகரமுனை யில்லை. |
|
இஃது அத்து முதல் திரியுமாறு கூறுகின்றது. |
இதன் பொருள்: அத்தின் அகரம் - அத்துச்சாரியையின் அகரம், அகரமுனை இல்லை - அகர ஈற்றுச் சொன்முன்னர் இல்லையாம் என்றவாறு. |
'அத்தவண் வரினும் வரைநிலை யின்றே' (எழு - 219) என்பதனான் மகப்பெயர் அத்துப்பெற்று நின்றது. மகத்துக்கையென அகரங்கெட்டு நின்றது. விளவத்துக்கண்ணென் புழிக் கெடாதுநிற்றல் 'அத்தே வற்றே' (எழு - 133) என்பதனுள் 'தெற்றென் றற்றே' என்பதனாற் கூறுப. |
(23) |
126. | இக்கி னிகர மிகரமுனை யற்றே. |
|
இஃது இக்கு முதல் திரியுமாறு கூறுகின்றது. |
இதன் பொருள்: இக்கின் இகரம் - இக்குச் சாரியையினது இகரம், இகரமுனை அற்று - இகரஈற்றுச்சொன் முன்னர் முற்கூறிய அத்துப்போலக் கெடும் என்றவாறு. |
'திங்கண் முன்வரின்' (எழு - 248) என்பதனாற்பெற்ற இக்கு ஆடிக்குக்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என இகரங்கெட்டு நின்றது. இஃது இடப்பொருட்டு. |
(24) |
127. | ஐயின் முன்னரு மவ்விய னிலையும். |
|
இதுவும் அது. |
இதன் பொருள்: ஐயின் முன்னரும் அவ்வியல் நிலையும் - இக்கின் இகரம் இகர ஈற்றுச் சொன்முன்னரன்றி ஐகார ஈற்றுச் சொன்முன்னரும் மேற்கூறிய கெடுதலியல்பிலே நிற்கும் என்றவாறு. |
'திங்களு நாளு முந்துகிளந் தன்ன' (எழு - 286) என்பதனாற் சித்திரைக்குக் கொண்டான் என்புழிப்பெற்ற இக்கு ஐகாரத்தின் முன்னர்க் கெட்டவாறு காண்க. |
(25) |