இதன் பொருள்: பெயருந் தொழிலும் - பெயர்ச்சொல்லுந் தொழிற்சொல்லும், பிரிந்து இசைப்ப ஒருங்கு இசைப்ப - பெயருந் தொழிலுமாய்ப் பிரிந்திசைப்பப் பெயரும் பெயருமாய்க்கூடியிசைப்ப, வேற்றுமையுருபு நிலைபெறுவழியும்-வேற்றுமை செய்யும் உருபுகள் தொகாது நிலைபெற்ற இடத்தும், தோற்றம் வேண்டாத் தொகுதிக்கண்ணும் - அவ்வேற்றுமை யுருபுகள் தோற்றுதல் வேண்டாது தொக்க இடத்தும், ஒட்டுதற்கு ஒழுகிய வழக்கொடு சிவணி - தாம் பொருந்துதற் கேற்ப நடந்த வழக்கோடே பொருந்தி, சொற்சிதர்மருங்கின் - சாரியைபெறும் புணர்மொழிகளைப் பிரித்துக் காணுமிடத்து, சாரியை இயற்கை வழிவந்து விளங்காது இடை நின்று இயலும் - அச் சாரியையினது தன்மை அச்சொற்களின்பின்னே வந்து விளங்காது நடுவே நின்று நடக்கும், |