புள்ளியீற்றின் முன்னர் அத்தின்மிசை யொற்றுக் கெடாது நிற்றலுங் கொள்க. |
உதாரணம் : விண்ணத்துக் கொட்கும், வெயிலத்துச் சென்றான், இருளத்துக் கொண்டான் என வரும். மெய்யென்றதனான் அத்தின் அகரம் அகரமுன்னரேயன்றிப் பிற உயிர் முன்னருங் கெடும் ஒரோவிடத்தென்று கொள்க. 1அண்ணாத்தேரி, திட்டாத்துக்குளம் என ஆகாரத்தின் முன்னரும் வரும் அத்தின் அகரங் கெட்டது. இவற்றை அகர ஈறாக்கியும் முடிப்ப. இனித் தெற்றென்றெற்றே என்றதனான் அத்தின் அகரந் தெற்றெனக் கெடாது நிற்கும் இடமுங் கொள்க. அதவத்துக்கண், விளவத்துக்கண் என வரும். |
134. | காரமுங் கரமுங் கானொடு சிவணி நேரத் தோன்று மெழுத்தின் சாரியை. |
|
இது மொழிச்சாரியையை விட்டு எழுத்துக்கட்கு வருஞ்சாரியைகளது பெயரும் முறையுந் தொகையும் உணர்த்துகின்றது. |
இதன் பொருள்: காரமுங் கரமுங் கானொடு சிவணி - காரமுங் கரமுங் கானொடு பொருந்தி, எழுத்தின் சாரியை நேரந் தோன்றும் - எழுத்தின்கண்வருஞ் சாரியையாதற்கு எல்லா ஆசிரியரானும் உடம்படத்தோன்றும் என்றவாறு. |
காரமுங் கரமும் 2எடுத்துச் சொல்லிய வழி இனிதிசைத்தலானும், வழக்குப் பயிற்சி யுடைமையானும், வட வெழுத்திற்கும் உரியவாதலானுஞ் சேரக்கூறினார். கான் அத்தன்மையின்மையினாற் பின்வைத்தார். நேரத்தோன்று மெனவே நேரத்தோன்றாதனவும் உளவாயின. அவை ஆனம், ஏனம், ஓனம் என்க. இவை சிதைந்த வழக்கேனுங் கடியலாகாவாயின. |
(32) |
135. | அவற்றுள் கரமுங் கானு நெட்டெழுத் திலவே. |
|
1. அண்ணா, திட்டா என்பன ஊர்போலும். |
2. எடுத்துச் சொல்லல் - எழுப்பிச் சொல்லல் ; முயற்சி. |