141. | எழுத்தோ ரன்ன பொருடெரி புணர்ச்சி யிசையிற் றிரித னிலைஇய பண்பே. |
|
இஃது எழுத்துக்கள் ஒன்று பலவாமென எய்தாத தெய்துவிக்கின்றது. |
இதன் பொருள்: எழுத்தோ ரன்ன பொருள்தெரி புணர்ச்சி - எழுத்து ஒருதன்மைத்தான பொருள் விளங்க நிற்கும் புணர் மொழிகள், இசையிற் றிரிதல் நிலைஇய பண்பு - எடுத்தல் படுத்தல் நலிதலென்கின்ற ஓசைவேற்றுமையாற் புணர்ச்சி வேறுபடுதல் நிலைபெற்ற குணம் என்றவாறு. |
உதாரணம் : செம்பொன்பதின்றொடி, 1செம்பருத்தி, குறும்பரம்பு, நாகன்றேவன்போத்து, தாமரைக்கணியார், குன்றேறாமா என இவை இசையிற் றிரிந்தன. |
(39) |
142. | அவைதாம் முன்னப் பொருள புணர்ச்சி வாயி னின்ன வென்னு மெழுத்துக்கட னிலவே. |
|
இது மேலதற்கோர் புறனடை கூறுகின்றது. |
இதன் பொருள்: அவைதாம் - பல பொருட்குப் பொதுவென்ற புணர்மொழிகள் தாம், முன்னப்பொருள் - குறிப்பான் உணரும் பொருண்மையினையுடைய, புணர்ச்சிவாயின் இன்ன வென்னும் எழுத்துக் கடன் இல - புணர்ச்சியிடத்து இத்தன்மைய வென்னும் எழுத்து முறைமையை உடையவல்ல என்றவாறு. |
செம்பொன்பதின்றொடி என்றுழிப் பொன்னாராய்ச்சி யுளவழிப் பொன்னெனவுஞ் செம்பாராய்ச்சி யுளவழிச் செம்பெனவுங் குறிப்பான் உணரப்பட்டது. இசையிற் றிரி தலென்றது ஒலியெழுத்திற்கெனவும் எழுத்துக்கடனில வென்றது வரிவடிவிற்கெனவுங் கொள்க. |
(40) |
புணரியல் முற்றிற்று. |
|
1. செம்பு+அருத்தி. அருத்தி-விருப்பம். செம்+பருத்தி எனவும் பிரியும். தாமரை+கண்ணியார். கண்ணி - மாலை, தாம்+அரைக்கு+அணியார், தா+மரைக்கு+அண்ணியார், தா+தாவல், இவ்வுதாரணம் மகாலிங்கையர் பதிப்பிலில்லை. |