2சிறப்புப்பாயிரம்

'ஆயிர முகத்தா னகன்ற தாயினும்
பாயிர மில்லது பனுவ லன்றே.'
என்றாராகலின். 

 

பாயிரமென்றது  புறவுரையை.   நூல்கேட்கின்றான்  புறவுரை  கேட்கிற்
கொழுச்சென்றவழித் துன்னூசி  இனிது செல்லுமாறு போல, அந்நூல் இனிது
விளங்குதலிற் புறவுரை கேட்டல் வேண்டும். என்னை?
 

'பருப்பொருட் டாகிய பாயிரங் கேட்டார்க்கு
நுண்பொருட் டாகிய நூல்இனிது விளங்கும்.'
என்றாராகலின்.
 

 

அப்பாயிரந்தான்   தலையமைந்த  யானைக்கு  வினையமைந்த  பாகன்
போலவும்  அளப்பரிய  ஆகாயத்திற்கு  விளக்கமாகிய திங்களும் ஞாயிறும்
போலவும்   நூற்கு   இன்றியாமையாச்   சிறப்பிற்றா   யிருத்தலின்,  அது
கேளாக்காற் குன்றுமுட்டிய  குரீஇப்  போலவும் குறிச்சிபுக்க மான்போலவும்
மாணாக்கன் இடர்ப்படுமென்க.
 

அப்பாயிரம் பொதுவுஞ் சிறப்புமென இருவகைத்து.
 

அவற்றுட்   பொதுப்பாயிரம்   எல்லா  நூன்முகத்தும்  உரைக்கப்படும்.
அதுதான் நான்கு வகைத்து.
 

'ஈவோன் றன்மை யீத லியற்கை
கொள்வோன் றன்மை கோடன் மரபென
வீரிரண் டென்ப பொதுவின் றொகையே.'

 
என்னும் இதனான் அறிக.
 

ஈவோர் கற்கப்படுவோருங் கற்கப்படாதோருமென இருவகையர்.அவருட்
கற்கப்படுவோர் நான்கு திறத்தார்.
 

'மலைநிலம் பூவே துலாக்கோலென் றின்ன
ருலைவி லுணர்வுடை யோர்.'
 

இதனுள்,
 

'மலையே,
அளக்க லாகாப் பெருமையு மருமையு
மருங்ககல முடைமையு மேறற் கருமையும்
பொருந்தக் கூறுப பொச்சாப் பின்றி.' 

 

'நிலத்தி னியல்பே நினைக்குங் காலைப்
பொறையு டைமையொடு செய்பாங் கமைந்தபின்