உதாரணம் : அவர்யார் எனவும் அதுயாவது எனவும் வரும். அவர் யாவரென்பது வகரங்கெட்டு அவர் யாரென நின்றவழி 'யாஅ ரென்னும் வினாவின் கிளவி' (சொ - 210) என்று வினையியலுட் கூறும் வினைக்குறிப்புச் சொல்லாம் பிறவெனின், ஆகாது; அவ்வகரங் கெட்டாலும் ஈண்டு யாவரென்னும் பெயர்த்தன்மையாயே நிற்றலின். அது பெற்றவாறென்னையெனின், ஈண்டுப் பலரறி சொன்முன்வந்த யாவரென்பதன் வகரங் கெடுமெனவே, ஏனை அவன் அவள் என்னும் இருபான் முன்னும் யாவரென்பது வாராதென்றும் அது திரிந்து மருவாய் நிற்குமென்றுங் கூறுதலானும் 'யாவரென்னும் பெயரிடை' என்பதனானும் பெற்றாம். இதனானே அவன்யாவர் அவள்யாவர் என்றாற் பால்வழுவாமென்பது பெற்றாம். இதனை 'யாவன் யாவள் யாவ ரென்னு - மாவயின் மூன்றோடு' (சொ - 162) எனப் பெயராக ஓதியவாற்றான் உணர்க. அன்றியும் யாரென்னும் வினாவின் கிளவி முப்பாற்கும் உரித்தென்று யாரென்னும் வினாவினைக் குறிப்பினை அவன்யார் அவள்யார் அவர்யார் என முப்பாற்கும் ஒப்ப உரிமை கூறுதலானும் அது வேறென்பது பெற்றாம். அது வினையியலுள் ஓதினமையானும் 'வினாவிற் கேற்றல்' (சொ - 66) எனப் பயனிலையாக ஓதினமையானும் வேறாயிற்று. |