6. உருபியல் |
173. | அஆ உஊ ஏஒள வென்னு மப்பா லாற னிலைமொழி முன்னர் வேற்றுமை யுருபிற் கின்னே சாரியை. |
|
என்பது சூத்திரம். |
உருபுகளோடு பெயர் புணரும் இயல்பு உணர்த்தினமையின் இவ்வோத்து உருபியலென்னும் பெயர்த்தாயிற்று. மேற்றொகுத்துப் புணர்த்ததனை ஈண்டு விரித்துப் புணர்க்கின்றாராகலின், இவ்வோத்துத் தொகைமரபோடு இயைபுடைத்தாயிற்று. இச் சூத்திரம் அகரமுதலிய ஈற்றான்வரும் ஆறு ஈற்றுச்சொற்கள் நின்று இன் பெற்று உருபினோடு புணருமாறு கூறுகின்றது. உருபின் பொருள்படவரும் புணர்ச்சி மேற்கூறுப. |
இதன் பொருள்: அ ஆ உ ஊ ஏ ஒள என்னும் அப்பால் ஆறன் நிலைமொழி முன்னர் - அ ஆ உ ஊ ஏ ஒள என்று சொல்லப்படுகின்ற அக்கூற்று ஆறினையும் ஈறாகவுடைய நிலைமொழிகளின் முன்னர் வருகின்ற, வேற்றுமை யுருபிற்கு இன்னே சாரியை - வேற்றுமை யுருபுகட்கு இடையே வருஞ்சாரியை இன்சாரியையே என்றவாறு. |
உதாரணம் : விளவினை விளவினொடு விளவிற்கு விளவினது விளவின்கண் எனவும், பலாவினை பலாவினொடு பலாவிற்கு பலாவினது பலாவின்கண் எனவும், கடுவினை கடுவினொடு கடுவிற்கு கடுவினது கடுவின்கண் எனவும், தழூஉவினை தழூஉவினொடு தழூஉவிற்கு தழூஉவினது தழூஉவின்கண் எனவும், சேவினை சேவினொடு சேவிற்கு சேவினது சேவின்கண் எனவும், வௌவினை வௌவினொடு வௌவிற்கு வௌவினது வௌவின்கண் எனவும் வரும். இவ்வாறே செய்கையறிந்து ஒட்டுக. |
'இன்னென வரூஉம் வேற்றுமை யுருபிற் கின்னென் சாரியை யின்மை வேண்டும்.' |
|
(எழு - 131) |
எனவே, ஏனைய இன்பெறுமென்றலின், 1'ஞ ந ம ய வ' (எழு - 144) என்பதனான் இயல்பென்றது விலக்கிற்றாம். |
(1) |
|
1. ஞ ந ம ய வ என்னுந் தொகைமரபு உ - ம் சூத்திரத்தால் இயல்பென்றதை விலக்கிற்றென்றது, உருபுகள் நிலைமொழிமுன் இயல்பாகாது இன்பெறுமென்றதை. |