யாமென் இறுதி ஆ எ - ஆகும் - யாமென்னும் மகரஈற்றுச் சொல்லில் ஆகாரம் எகாரமாம், ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும் - அவ்விடத்து நின்ற யகரமாகிய மெய் கெடுதலை விரும்பும் ஆசிரியன், ஏனை இரண்டும் நெடுமுதல் குறுகும் - ஒழிந்த தாம் நாமென்னும் இரண்டும் நெடியவாகிய முதல் குறுகித் தம் நம் என நிற்கும் என்றவாறு. |
உதாரணம் : தம்மை தம்மொடு நம்மை நம்மொடு எம்மை எம்மொடு என ஆறு உருபோடும் ஒட்டுக. ஆறனுருபிற்கும் நான்கனுருபிற்குங் கருவி யறிந்து முடிக்க. |
மெய்யென்றதனாற் பிறவயின்மெய்யுங் கெடுக்க. தங்கண் நங்கண் எங்கண் என ஏழனுருபின்கண் மகரங்கெடுத்து 'வல்லெழுத்து முதலிய' (எழு - 114) என்பதனான் மெல்லெழுத்துக் கொடுக்க. |
(16) |
189. | எல்லா மென்னு மிறுதி முன்னர் வற்றென் சாரியை முற்றத் தோன்று மும்மை நிலையு மிறுதி யான. |
|
இது மகர ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது. |
இதன் பொருள் :எல்லா மென்னும் இறுதி முன்னர் வற்றென்சாரியை முற்றத்தோன்றும் - எல்லாமென்னும் மகர ஈற்றுச்சொன் முன்னர் அத்தும் இன்னும் அன்றி வற்றென்னுஞ் சாரியை முடியத்தோன்றி முடியும், உம்மை நிலையும் இறுதியான - ஆண்டு உம்மென்னுஞ் சாரியை இறுதிக்கண் நிலைபெறும் என்றவாறு. |
மகரம் வற்றின்மிசை யொற்றெனக் கெடுக்க. |
எல்லாவற்றையும் எல்லாவற்றினும் எல்லாவற்றுக்கண்ணும் என வரும். முற்றவென்றதனான் 1ஏனை முற்றுகரத்திற்கும் உம்மின் உகரங் கெடுத்துக்கொள்க. எல்லாவற்றொடும் எல்லாவற்றுக்கும் எல்லாவற்றதும் என வரும். முற்றுகரமாதலின் ஏறி முடியா. |
(17) |
|
1. ஏனை முற்றுகரம் என்றது, ஒடு, கு, அது என்பவற்றை. |