னார்க்கினியர் உரையை யாம் பதிப்பதாகவும், அவ்வுரைக்கு  மாணாக்கர்கள்
இடர்ப்பாடின்றிப்   படித்தற்பொருட்டு,  ஒரு  விரிவான  விளக்கவுரையைத்
தாங்கள் எழுதி உதவின், அதனையும் அவ்வுரையோடு சேர்த்துப் பதிப்பேம்
என்பதாகவும்    தெரிவித்தேம்.    அதற்கு    அவர்கள்   தாம்   உடல்
நலமில்லாதிருப்பதால்  அவ்வாறு  செய்ய  முடியாதென்றும்,  "யாம் படித்த
காலத்தும்,  படிப்பித்த  காலத்தும்,   குறித்து   வைத்த   குறிப்புக்களைத்
தருகின்றேம்;  அவற்றைக்  கொண்டு  சென்று,  அவ்வுரையோடு சேர்த்துப்
பதித்துத் தமிழ் உலகிற்குப் பயன் படுத்துக" என்றுஞ் சொல்லி, அவ்வுரைக்
குறிப்புக்களை   எமக்கு   உதவினார்கள்.   அவ்வுரைக்   குறிப்புக்களும்,
அவ்வுரையோடு சேர்த்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. அன்றியும்  நூலாசிரியர்
வரலாறு,  உரையாசிரியர் வரலாறு, உதாரண அகராதி, அரும்பத  விளக்கம்
முதலியவற்றின் அகராதி,  மேற்கோள்  விளக்கம்  முதலியவற்றையும்  தம்
மாணவர்களைக்   கொண்டு   எழுதுவித்து   அவர்களே   உதவினார்கள்.
ஆதலால்  இது  கணேசையர்  அவர்கள்  பதிப்பாக  எம்மால் வெளியிடப்
படுகின்றது.
 

"கைம்மா றுகவாமற் கற்றறிந்தோர் மெய்வருந்தித்
தம்மா லியலுதவி தாஞ்செய்வார்"

 
என்றாங்கு ஐயர்
 

அவர்கள்   செய்தவுதவி    எம்மாலன்றித்    தமிழ்   உலகத்துள்ளார்
எவர்களாலும் பெரிதும் போற்றற் குரியதேயாம்.
 

உடலோம்பும் ஒன்றனையே குறிக்கோளாகக் கொண்ட நமக்கும், பூவுடன்
கூடிய    நாரும்   மணம்   பெற்றவாறுபோலப்   பல   பேரறிஞர்களின்
சேர்க்கையால்  இப்பெரும்  பணியில்  ஈடுபடுமாறு  அருள் செய்த அருட்
பெருஞ்  சோதியை  -  ஆனந்த  வாரியை  -  உண்மைப்  பொருளை -
ஊக்கமளிப்பானை  -  எண்ணற்கரியானை  -  ஏறுடைய  பெம்மானை  -
ஐயாறுடையானை  -  ஒப்பற்ற  கண்ணுதலை  - ஓங்காரத்துட்பொருளை -
எப்பற்றுமின்றி இறைஞ்சுவதே கடனாம்.
 

'திருமகள் நிலையம்', மயிலிட்டிதெற்கு,
தாது-தை-1-ம் நாள்

நா. பொன்னையா