192. | தான்யா னென்னு மாயீ ரிறுதியு மேன்முப் பெயரொடும் வேறுபா டிலவே. |
|
இது னகர ஈற்றுட் சிலவற்றிற்கு முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் : தான் யான் என்னும் ஆயீ ரிறுதியும் - தான் யான் என்று சொல்லப்பட்ட அவ்விரண்டு னகர ஈறும், மேல் முப்பெயரொடும் வேறுபாடு இலவே - மேல் மகர ஈற்றுட் கூறிய மூன்றுபெயரோடும் வேறுபாடின்றித் தானென்பது குறுகியும் யானென்பதன்கண் ஆகாரம் எகாரமாய் யகர வொற்றுக் கெட்டும் முடியும் என்றவாறு. |
தன்னை என்னை என எல்லாவுருபோடும் ஒட்டுக. செய்கை யறிந்து ஒற்றிரட்டுதல் 'நெடியதன் முன்னர்' என்பதனுள் இலேசாற் கொள்க. |
(20) |
193. | அழனே புழனே யாயிரு மொழிக்கு மத்து மின்னு முறழத் தோன்ற லொத்த தென்ப வுணரு மோரே. |
|
இதுவும் அது. |
இதன் பொருள் : அழனே புழனே ஆயிரு மொழிக்கும் - அழன் புழன் ஆகிய அவ்விரு மொழிக்கும், அத்தும் இன்னும் உறழத் தோன்றல் ஒத்ததென்ப - அத்துச்சாரியையும் இன் சாரியையும் மாறிவரத் தோன்றுதலைப் பொருந்திற்றென்பர், உணருமோர் - அறிவோர் என்றவாறு. |
அழத்தை அழனினை, புழத்தை புழனினை எனச் செய்கையறிந்து எல்லாவுருபினோடும் ஒட்டுக. னகரத்தை அத்தின் மிசை ஒற்றென்று கெடுத்து 'அத்தி னகரம்' (எழு - 125) என்பதனான் முடிக்க. 1தோன்ற லென்றதனான் எவன் என நிறுத்தி வற்றுக்கொடுத்து வேண்டுஞ்செய்கை செய்து எவற்றை எவற்றொடு என முடிக்க. எல்லாவுருபினோடும் ஒட்டுக. |
|
1. இச் சூத்திரத்தால் எவன் என்பதற்கு வற்றுக் கொடுத்து, வற்றுமிசை யொற்றென்று னகரங் கெடுத்து 'வஃகான் மெய்கெட' என்னுஞ் சூத்திரத்து 'ஆகியபண்பு' என்றமையால் ஐகாரத்தின் முன்னன்றி, அகரத்தின் முன்னும் வற்றின் வகரங் கெடுமென வகர அகரத்தைக் கெடுத்து எவற்றை என முடிக்க |