1எற்றை என்புழி நிலைமொழிவகரம் இதனாற் கெடுக்க. இனி ஒத்ததென்றதனால் எகின் என நிறுத்தி அத்தும் இன்னுங் கொடுத்துச் செய்கைசெய்து எகினத்தை எகினை என ஒட்டுக. அத்து இனிது இசைத்தலின் முற்கூறினார். |
(21) |
194. | அன்னென் சாரியை யேழ னிறுதி முன்னர்த் தோன்று மியற்கைத் தென்ப. |
|
இஃது ஏழென்னும் எண்ணுப்பெயர் அன்சாரியை பெற்றுப் புணர்க என்கின்றது. |
இதன் பொருள் : அன்னென் சாரியை ஏழனிறுதி முன்னர்த்தோன்றும் இயற்கைத் தென்ப - அன்னென்னுஞ் சாரியை ஏழென்னும் எண்ணுப்பெயரின் முன்னே தோன்றும் இயல்பினை யுடைத்தென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. |
உதாரணம் :ஏழனை ஏழற்கு ஏழனின் என்க. ஏனையுருபுகளோடுஞ் செய்கை யறிந்து ஒட்டுக. சாரியை முற்கூறியவதனாற் பிறவும் அன்பெறுவன கொள்க. பூழனை யாழனை என ஏனையவற்றோடும் ஒட்டுக. மேல்வருகின்ற இன்சாரியையைச் சேரவைத்தமையான் அவையெல்லாம் இன்சாரியைபெற்று வருதலுங் கொள்க. ஏழினை பூழினை யாழினை என வரும். |
(22) |
195. | குற்றிய லுகரத் திறுதி முன்னர் முற்றத் தோன்று மின்னென் சாரியை. |
|
இது குற்றுகர ஈற்றிற்கு முடிபு கூறுகின்றது. |
இதன் பொருள் :குற்றியலுகரத்து இறுதி முன்னர் - குற்றியலுகரமாகிய ஈற்றின் முன்னர், முற்றத் தோன்றும் இன்னென் சாரியை - முடியத்தோன்றும் இன்னென்னுஞ் சாரியை என்றவாறு. |
உதாரணம் :நாகினை நாகினொடு, வரகினை வரகினொடு என வரும். ஏனையவற்றோடுஞ் செய்கை யறிந்து ஒட்டுக. |
முற்ற என்றதனானே பிறசாரியை பெறுவனவுங் கொள்க. 2வழக்கத்தாற் பாட்டாராய்ந்தா னெனவுங், கரியதனை எனவும் வரும். |
(23) |
|
1. எற்றை என்பதில் நிலைமொழி வகரங் கெட்டதற்கு விதியும் 'தோன்றல்' என்பது. |
2. வழக்கு, கரியது என்பன குற்றுகரங்கள் அத்தும் அன்னும் பெற்றன. |