192உயிர்மயங்கியல்

7. உயிர் மயங்கியல்
 

203.

அகர விறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமை யல்வழிக் கசதபத் தோன்றிற்
றத்த மொத்த வொற்றிடை மிகுமே.

 

என்பது சூத்திரம். உயிரீறு நின்று வன்கணத்தோடுஞ்  சிறுபான்மை ஏனைக்
கணங்களோடும்    மயங்கிப்   புணரும்   இயல்பு    உணர்த்தினமையின்
இவ்வோத்து  உயிர்மயங்கியலென்னும்  பெயர்த்தாயிற்று.  மேற் பெயரோடு
உருபு    புணருமாறு  கூறிப்    பெயர்வருவழி    உருபு   தொக்குநின்ற
பொருட்புணர்ச்சி கூறுகின்றமையின் உருபியலோடு இயைபுடைத்தாயிற்று.
 

இச் சூத்திரம் அகர  ஈற்றுப்  பெயர்  அல்வழிக்கண்  வன்கணத்தோடு
புணருமாறு கூறுகின்றது.
 

இதன் பொருள் :அகர  இறுதிப் பெயர்நிலை முன்னர் - அகரமாகிய
இறுதியையுடைய   பெயர்ச்சொன்  முன்னர்,  வேற்றுமையல்வழிக்  கசதபத்
தோன்றின்  -  வேற்றுமையல்லா   தவிடத்துக்  கசதப   முதன்மொழிகள்
வருமொழியாய்த்   தோன்றுமாயின்,  தத்தம்  ஒத்த  ஒற்று இடைமிகும்  -
தத்தமக்குப்  பொருந்திய  அக்  கசதபக்களாகிய  ஒற்று இடைக்கண் மிகும்
என்றவாறு.
 

உதாரணம் விளக்குறிது  நுணக்குறிது அதற்குறிது சிறிது தீது பெரிது
என ஒட்டுக. இவை அஃறிணை இயற்பெயராகிய எழுவாய் வினைக்குறிப்புப்
பண்பாகிய பயனிலையோடு முடிந்தன.
 

ஒத்தவென்றமையாது 1தத்தமொத்த என்றதனான் அகர ஈற்று உரிச்சொல்
வல்லெழுத்து  மிக்கும்  மெல்லெழுத்து  மிக்கும்  முடியும் முடிபும்  அகரந்
2தன்னை உணரநின்றவழி வன்கணத்தோடு மிக்கு முடியும் முடிபுங் கொள்க.
தடக்கை


1. தத்தம் ஒற்றெனின் வல்லினத்திற் கினமாகிய மெல்லெழுத்துக்களையுங்
குறிக்கும்.  அவ்வாறு   கருதாமல்   தத்தம்   ஒத்த    ஒற்றென்றாரென்று
பொருள்கோடல் சிறப்பாகும்.
 

2. தன்னை    -    எழுத்தாகிய    தன்னை    என்க.   அஃறிணை
இயற்பெயரென்றது,  பால்பகா  வஃறிணைப்பெயரை. விள,  நுண  என்பன
பால்பகா வஃறிணைப்பெயர். அவை எழுவாயாய் நின்று குறிது,