206. | யவமுன் வரினே வகர மொற்றும். |
|
இதுவும் அது. |
இதன் பொருள்: யவ முன்வரின் - யகர வகர முதன்மொழி அகரச்சுட்டின் முன்னே வரின், வகரம் ஒற்றும் - இடைக்கண் வகரம் ஒற்றாம் என்றவாறு. |
உதாரணம் :அவ்யாழ் அவ்வளை என வரும். |
வருமொழி முற்கூறியவதனால் அகரந் தன்னையுணர நின்ற வழியும் வகரம் மிகுதல் கொள்க. அவ்வளைந்தது என வரும். |
(4) |
207. | உயிர்முன் வரினு மாயிய றிரியாது. |
|
இதுவும் அது. |
இதன் பொருள் : உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது - உயிர்கள் அகரச்சுட்டின்முன் வரினும் முற்கூறிய வகரம் மிக்கு வரும் இயல்பிற் றிரியாது என்றவாறு. |
அ என நின்ற சுட்டின் முன்னர் அடை என வருவித்து வகரம் ஒற்றித் தன்னுரு இரட்டி உயிரேற்றி அவ்வடை அவ்வாடை அவ்விலை அவ்வீயம் அவ்வுரல் அவ்வூர்தி அவ்வெழு அவ்வேணி அவ்வையம் அவ்வொழுக்கம் அவ்வோடை அவ்வௌவியம் என ஒட்டுக. |
'நெடியதன் முன்னர்' (எழு - 160) என்பதனுள் 'நெறியியல்' என்றதனான் இரட்டுதல் கூறினமையின், அது நிலைமொழித் தொழிலென்பது பெறப்பட்டது. வருமொழி முற்கூறியவதனான் அகரந் தன்னை யுணரநின்ற வழியும் வகரம் மிகுதல் கொள்க. அவ்வழகிது என வரும். திரியாதென்றதனான் மேற் சுட்டுநீண்டவழி வகரக்கேடு கொள்க. |
(5) |
208. | நீட வருதல் செய்யுளு ளுரித்தே. |
|
இஃது எய்தியது விலக்கிச் செய்யுட்கு ஆவதோர் விதி கூறுகின்றது. |
இதன் பொருள் : நீட வருதல் செய்யுளுள் உரித்து - அகரச் சுட்டு நீடவருதல் செய்யுளிடத்து உரித்து என்றவாறு. |