இதன் பொருள் :அன்ன என்னும் உவமக் கிளவியும் - அன்ன என்று சொல்லப்படும் உவமவுருபாகிய அகர ஈற்று இடைச்சொல்லும், அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும் - அணியாரைக் கருதின விளியாகிய நிலைமையினையுடைய அகர ஈற்று உயர்திணைப் பெயர்ச்சொல்லும், செய்ம்மன என்னுந் தொழிலிற சொல்லும் - செய்ம்மன என்று சொல்லப்படுந் தொழிற்சொற் பொருள் தருங்கால் உம் ஈற்றான் இறுஞ்சொல்லும், ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும் - ஒருவ நான் ஏவற்றொழின்மை கருதிக் கூறப்பட்ட ஏவற்பொருண்மையை முற்ற முடித்தலை உணர்த்தும் அகர ஈற்று வினைச்சொல்லும், செய்த என்னும் பெயரெஞ்சு கிளவியும் - செய்த என்று சொல்லப்படும் பெயரெச்சமாகிய அகர ஈற்று வினைச்சொல்லும், செய்யிய என்னும் வினையெஞ்சு கிளவியும் - செய்யிய என்று சொல்லப்படுகின்ற வினையெச்சமாகிய அகர ஈற்று வினைச்சொல்லும், அம்ம என்றும் உரைப்பொருட் கிளவியும் - அம்ம என்று சொல்லப்படும் எதிர்முகமாக்கிய அகர ஈற்று இடைச்சொல்லும், பலவற்று இறுதிப் பெயர்க்கொடை உளப்பட - பன்மைப் பொருளை உணர்த்தும் அகர ஈற்றுப் பெயர்கள் ஐந்தினையும் முற்கூறியவற்றோடு கூட்டிக்கொடுத்தல் உள்ளிட்டு, அன்றி அனைத்தும் இயல்பென மொழிப - அவ் வெட்டுச் சொல்லும் இயல்பாய் முடியுமென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. |