இதன் பொருள் : ஆவும் - ஆவென்னும் பெயரும், மாவும் - மாவென்னும் பெயரும், விளிப்பெயர்க் கிளவியும் - விளித்தலையுடைய பெயராகிய உயர்திணைச் சொல்லும், யாவென் வினாவும் - யாவென்னும் வினாப்பெயரும், பலவற்று இறுதியும் - பன்மைப் பொருளை உணர்த்தும் ஆகார ஈற்றுப் பெயரெச்ச மறையாகிய முற்றுவினைச் சொல்லும், 1ஏவல் குறித்த உரையசை மியாவும் - முன்னிலை யேவல் வினையைக் கருதி வரும் எதிர்முகமாக்குஞ் சொல்லினைச் சேர்ந்த மியா வென்னும் ஆகார ஈற்று இடைச்சொல்லும், தன் தொழில் உரைக்கும் வினாவின் கிளவியொடு - தனது தொழிலினைச் சொல்லும் ஆகார ஈற்றுத் தன்மையாகிய வினாச் சொல்லோடு கூட, அன்றியனைத்தும் - அவ் வெழுவகையாகிய சொல்லும், இயல்பென மொழிப - இயல்பாய் முடியுமென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. |