214உயிர்மயங்கியல்

உதாரணம் :
 

'இறவுப்புறத் தன்ன பிணர்ப்படு தடவுமுதற்
கறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை'

(நற்-19)

'புறவுப்புறத் தன்ன புன்காயுகாய்'

(குறு-274)

 

எனவரும். உகரம்  வகுப்பவே  நிலைமொழி  அகரங்  கெட்டது.  அதிகார
வல்லெழுத்து  விலக்காமையின்  நின்று   முடிந்தது.  இனி  நிலைமொழித்
தொழில்  வரையாது  கூறினமையின்   இயல்பு   கணத்திற்கும்   இவ்விதி
எய்திற்றாகலின்,  ஆண்டு  வரும் உகரம்  புலப்பட  வராமையும்  உணர்க.
சுறவுயர்கொடி  அரவுயர்கொடி  முழவுறழ்தோள் என இவை குறியதனிறுதிச்
சினை  கெட்டு  வருமொழி  உயிர்   முதன்  மொழியாய் வருதலின் வகர
உடம்படு   மெய்   பெற்று   உகரம்   பெறாது   முடிந்தன.  1இவற்றிற்கு
இரண்டாமுருபு விரிக்க ; மூன்றாவதுமாம்.
 

(32)
 

235.

இகர விறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே.

 

இஃது இகர ஈற்றுப்பெயர்க்கு அல்வழிமுடிபு தொகை மரபிற் கூறி ஈண்டு
வேற்றுமை முடிபு கூறுகின்றது.
 

இதன் பொருள் இகர இறுதிப் பெயர்நிலை முன்னர் - இகர ஈற்றுப்
பெயர்ச்சொன்  முன்னர்   அதிகாரத்தாற்  கசதப   முதன்மொழி  வந்துழி,
வேற்றுமையாயின்   வல்லெழுத்து    மிகும்   -   வேற்றுமைப்  பொருட்
புணர்ச்சியாயின்  தமக்குப்  பொருந்தின   வல்லெழுத்து   மிக்கு  முடியும்
என்றவாறு.
 

உதாரணம் கிளிக்கால்  சிறகு  தலை  புறம்  என  வரும். புலி நரி
என்றாற்போல்வனவும் அவை.
 

இனிக் கிளிகுறுமை  கிளிக்குறுமை  எனக் குணம்பற்றி  வந்த  உறழ்ச்சி
முடிபு, மேல் 'வல்லெழுத்து மிகினும்'  (எழு - 246)  என்னுஞ்  சூத்திரத்து
'ஒல்வழி யறிதல்' என்பதனாற் கொள்க.
 

(33)

1. சுறவுயர்கொடி  -  சுறவை  உயர்த்தியகொடி  இரண்டாவது. சுறவால்
உயர்த்தியகொடி மூன்றாவது.