உயிர்மயங்கியல்223

இஃது எய்தியது விலக்கலும் எய்தாத தெய்துவித்தலுங் கூறுகின்றது.
 

இதன் பொருள் :  நீ  என்  பெயரும்  இடக்கர்ப்   பெயரும்  -  நீ
யென்னும்  பெயரும்  இடக்கர்ப்   பெயராகிய  ஈகார  ஈற்றுப்   பெயரும்,
மீயென  மரீஇய  இடம்வரை கிளவியும்  -  மீயென்று  சொல்ல  மருவாய்
வழங்கின   ஓரிடத்தை   வரைந்து  உணர்த்தும்   சொல்லும்,   ஆவயின்
வல்லெழுத்து இயற்கை யாகும் - புணருமிடத்து  முற்கூறிய  வல்லெழுத்துப்
பெறாது இயல்பாய் முடியும் என்றவாறு.
 

உதாரணம் :நீகுறியை  சிறியை   தீயை  பெரியை  எனவும்,  பீகுறிது
சிறிது  தீது  பெரிது   எனவும்   இவையிற்றுக்குப்   பொதுவான்  எய்திய
வல்லெழுத்து   விலக்குண்டன.   மீகண்   செவி    தலை   புறம்  இஃது
இலக்கணத்தோடு பொருந்திய மருவாதலின் எய்தாத தெய்துவித்தது.
 

நீயென்பது    அஃறிணை    விரவுப்பெயருள்   அடங்காதோவெனின்
மேல்நின்கையெனத்  திரிந்து  முடிதலின் அடங்காதாயிற்று. 1மீகண் என்பது
மேலிடத்துக் கண்ணென வேற்றுமையெனினும் இயல்புபற்றி உடன் கூறினார்.
 

(48)
 

251.

இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூஉ
முடனிலை மொழியு முளவென மொழிப.
 

இது வல்லெழுத்து மிகுக என்றலின் எய்திய திகந்து படாமற் காத்தது.
 

இதன் பொருள் :இடம்வரை   கிளவிமுன்   வல்லெழுத்து மிகூஉம் -
இடத்தை    வரைந்து    உணர்த்தும்   மீயென்னுஞ்   சொல்லின்முன்னர்
இயல்பாய்  முடிதலேயன்றி  வல்லெழுத்து  மிக்கும்  முடியும்,   உடனிலை
மொழியும் உள என  மொழிப - தம்மில்  ஓசை யியைந்து நிற்றலையுடைய
மொழிகளுள் உளவென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.


1. கண்மீ   என்பது   மீகண்  என  நிற்றலின் அல்வழியன்று என்றார்
உரையாசிரியர்.  இவர்    அதனை   மேலிடத்துக்கண்   என   விரித்தல்
பொருந்துமோ என்பது ஆராயத்தக்கது.