இதனை இலத்தாற் பற்றப்பட்ட புலவரென வேற்றுமையென்றாரால் உரையாசிரியரெனின், பற்றப்பட்ட புலவரென்பது பெயரெச்சமாதலிற் பற்றவென்னுந் தொழில் தோற்றுவிக்கின்ற முதனிலைச்சொல்லைச் சூத்திரத்து ஆசிரியர் எடுத்தோதிற்றிலராதலானும் படுவென்பதுதானும் புலவரென்னும் பெயரோடு முடியுங்கால் இரண்டுகாலமும் காட்டும் ஈறுகள் தொக்க முதனிலைச் சொல்லாய் நிற்றலின், அதனை எடுத்தோதினாராதலானும் ஆசிரியர்க்கு அங்ஙனம் கூறுதல் கருத்தன்மை உணர்க. |
அன்றியும் பற்றப்பட்ட என்புழி இரண்டு முதனிலைகூடி ஒன்றாய் நின்று பற்றுதலைச் செய்யப்பட்ட எனப் பொருள் தாராமையானும் அல்வழி யதிகாரமாதலானும் அது பொருளன்மை உணர்க. |
(21) |
317. | அத்தொடு சிவணு மாயிரத் திறுதி யொத்த வெண்ணு முன்வரு காலை. |
|
இஃது இவ் வீற்றுள் எண்ணுப்பெயருள் ஒன்றற்குத் தொகைமரபினுள் 'உயிரும் புள்ளியு மிறுதி யாகி' (எழு - 164) என்பதனான் எய்திய ஏயென் சாரியை விலக்கி அத்து வகுக்கின்றது. |
இதன் பொருள் : ஆயிரத்து இறுதி - ஆயிரமென்னும் எண்ணுப் பெயரின் மகரம், ஒத்த எண் முன்வருகாலை - தனக்கு அகப்படும் மொழியாய்ப் பொருந்தின எண்ணுப்பெயர் தன்முன் வருங்காலத்து, அத்தொடு சிவணும் - தொகைமரபிற் கூறிய ஏயென் சாரியை ஒழித்து அத்துச் சாரியையோடு பொருந்தி முடியும் என்றவாறு. |
உதாரணம் : ஆயிரத்தொன்று ஆயிரத்தொன்பது என ஒன்றுமுதல் ஒன்பதின்காறும் ஒட்டுக. மகரத்தை அத்தின் மிசை யொற்றென்று கெடுத்து 'அத்தி னகர மகரமுனை யில்லை' (எழு - 125) என்று முடிக்க. ஆயிரத்தொருபது என்றாற் போல்வனவற்றிற்கும் ஒட்டுக. |
நிலைமொழி முற்கூறாததனான் ஆயிரத்துக்குறை கூறுமுதல் என்பனவுங் கொள்க. இன்னும் இதனானே ஆயிரப்பத்தென்புழி மகரங்கெடுத்து வல்லொற்று மிகுத்து முடிக்க. |
(22) |