புணர்ச்சியின் இயல்பிற்றாய் இடைக்கண் நம்மும் இறுதிக்கண் உம்மும் பெற்று முடியும் என்றவாறு. |
உருபியலுள் 'எல்லா மென்னு மிறுதி முன்னர் - வற்றென் சாரியை' (எழு - 189) வகுத்ததனான் வற்றின்மிசை யொற்றென்று மகரங்கெடுத்த அதிகாரத்தான் 'உயர்திணையாயி னம்மிடை வரும்' (எழு - 190) என நம்மின் முன்னும் மகரங்கெடுத்தார், அதனோடு ஈண்டு மாட்டெறிதலின் அது கொண்டு ஈண்டும் மகரங்கெடுக்க. 'அம்மி னிறுதி' (எழு - 129) என்புழித் 'தன்மெய்' என்றதனான் நம்முச்சாரியையினது மகரந்திரிதல் கொள்க. |
எல்லா நங்கையும் செவியும் தலையும் புறமும் என ஒட்டுக. |
வருமொழி வரையாது கூறலின் எல்லாநஞ்ஞாற்சியும் நீட்சியும் என ஏற்பனவற்றோடு முடிபு அறிந்து ஒட்டுக. |
(29) |
325. | நும்மெ னொருபெயர் மெல்லெழுத்து மிகுமே. |
|
இது மகர ஈற்றிற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தது. |
இதன் பொருள் : நும்மென் ஒருபெயர் மெல்லெழுத்து மிகும் - நும்மென்று சொல்லப்படுகின்ற விரவுப்பெயர் பொருட் புணர்ச்சிக்கண் மெல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. |
நுங்கை செவி தலை புறம் என வரும். 'மகர விறுதி' (எழு - 310) என்பதனான் மகரங் கெடுக்க. |
ஒன்றென முடித்த லென்பதனான் உங்கை என வருவதூஉங் கொள்க. 'துவர' (எழு - 310) என்றதனான் ஞகர நகரங்கள் வந்துழி மகரங்கெடுதலும் ஒருபெயர் என்றதனான் ஒற்று மிகுதலுங் கொள்க. நுஞ்ஞாண் நூல் என வரும். இன்னும் ஒருபெயர் என்றதனான் நும்மணி யாழ் வட்டு அடை என மகரங்கெடாமையும் கொள்க. |
(30) |