270 புள்ளிமயங்கியல்

வன்கணத்து  உகரமும்  வல்லெழுத்தும்  இயல்புகணத்து  உகரமும் பெற்று
முடியும் என்றவாறு.
 

உதாரணம் : 1செம்முக்கடிது   சிறிது  தீது பெரிது ஞான்றது  நீண்டது
மாண்டது வலிது எனவும், செம்முக்கடுமை சிறுமை  தீமை பெருமை ஞாற்சி
நீட்சி   மாட்சி வலிமை  எனவும்  வரும். 'தும்முச்  செறுப்ப'  வென்பதும்
அது. இவை 'குறியதன் முன்னர்த் தன்னுரு விரட்டல்' (எழு - 160).
 

எல்லாமென்றதனான் உகரம்பெறாது  2நாட்டங்கடிது ஆட்டங்கடிது என
மெல்லெழுத்தாய்  அல்வழிக்கண் திரிதலும்  நாட்டக்கடுமை ஆட்டக்கடுமை
என வேற்றுமைக்கண் வல்லெழுத்து மிகுதலுங் கொள்க.
 

(32)
 

328.

ஈமுங் கம்மு முருமென் கிளவியு
மாமுப் பெயரு மவற்றோ ரன்ன.

  

இது  பொருட்பெயருட்  சில  தொழிற்பெயரோடு  ஒத்து   முடிக என
எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
 

இதன் பொருள்:ஈமுங்   கம்மும்   உருமென்   கிளவியும்  ஆமுப்
பெயரும் - ஈமென்னுஞ் சொல்லுங் கம்மென்னுஞ் சொல்லும் உருமென்னுஞ்
சொல்லுமாகிய   அம்  மூன்று  பெயரும், அவற்றோ ரன்ன  -  முற்கூறிய
தொழிற்பெயரோடு ஒருதன்மையவாய் வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும்
இயல்புகணத்து உகரமும் பெற்று முடியும் என்றவாறு.
 

ஈம் என்பது சுடுகாடு ; கம் - தொழில்.
 

உதாரணம் : ஈமுக்கடிது கம்முக்கடிது உருமுக்கடிது சிறிது  தீது பெரிது
ஞான்றது நீண்டது  மாண்டது வலிது எனவும், ஈமுக்கடுமை  கம்முக்கடுமை
உருமுக்கடுமை சிறுமை   தீமை  பெருமை  ஞாற்சி நீட்சி மாட்சி  வலிமை
எனவும் ஒட்டுக.
 

கிளவியென்றதனான்   வேற்றுமைக்கண்ணும்  அல்வழிக்கண்ணும் உயிர்
வருவழி உகரம்பெறாது ஈமடைவு ஈமடைந்தது என நிற்றலுங் கொள்க.


1. செம், தும் என்பன முதனிலைத் தொழிற்பெயர்
 

2. நாட்டம், ஆட்டம் என்பன விகுதிபெற்ற தொழிற்பெயர்.