இவர், சிறுப்பிட்டி வைரவநாதபிள்ளை குமாரர். 1832 - ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 - ந் திகதி பிறந்தவர். தமது 12 - ம் வயதில் பட்டுக்கோட்டைக் செமினரி யென வழங்கிய பல்கலைக் கழகத்திற் படித்துச் சிறந்த மாணாக்கனாக விளங்கினார். தமிழ் நூல்களைக் கல்லூரியிற் படித்ததனோ டமையாது முத்துக்குமாரக் கவிராயரிடமும் முறையே கற்றுணர்ந்தார். ஆங்கிலக் கல்வியறிவையும் வளர்த்து 1857 - ம் ஆண்டு முதன் முதல் சென்னைப் பல்கலைக் கழகத்தாரால் நடத்தப்பட்ட பிரவேச பரீட்சையிற் றேறியதோடு, அடுத்த நான்கு திங்கள் கழித்து இக் கழகத்தினரால் நடத்தப்பட்ட பீ. ஏ. பரீட்சையிலும் சிறந்த சித்தியடைந்தார். |
பிள்ளையவர்கள் முதலில் 1852 - ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 - ந் தேதி கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராயும், பின்பு 'தினவர்த்தமானி' எனும் தமிழ் வெளியீட்டின் ஆசிரியராயும், 1857 - ம் ஆண்டு கள்ளிக் கோட்டை அரசினர் கல்லூரித் தலைமையாசிரியராயும், சென்னை அரசியல் வரவு செலவுக் கணக்கு நிலைய முதல்வராயும், சிறிது காலம் வழக்கறிஞராயும், 1887 - ம் ஆண்டு தொடக்கம் புதுக்கோட்டைப் பெருமன்றத்து நீதிபதியாயும் கடமை புரிந்துள்ளார்கள். |
பிள்ளையவர்கள் பல உத்தியோகங்களி லிருந்தும் இடர்ப்பாடு நோக்காது, தமது பிறப்புரிமைத் தமிழ்க் கல்வியைக் கைவிட்டாரில்லை. தமக்குள்ள ஓய்வுநேரம் தமிழுக்குழைக்கும் நேரமென முடிவுசெய்து ஒழுகிவந்தார். தலைசிறந்த தமிழ் நூல்கள் பலவும் போற்றுவாரின்றி மறைந்துபோவதைக் கண்ணுற்று அவலக்கண்ணீருகுத்தார். எங்ஙனமாயினும் தமிழ்நூல்களை அச்சூர்தியேற்ற வேண்டுமெனத் துணிவு கொண்டார். பலவிடங்களில் முயன்று தேடியும் தேடுவித்தும் ஏடுகளைப் பெற்றார். அவை எடுக்கும்போதே ஓரந்தேய்ந்தும், கட்டு |