உரைவிளக்கக் குறிப்பு |
பொதுப்பாயிரம் |
முகம் - உறுப்பு. பனுவல் - நூல். கொழு - கலப்பைக் கொழு. துன்னூசி - அக் கொழுவை அகப்படுத்திக்கொண்டு அதன் கீழிடத்தே கூராகவிருக்கும் மரம். உழும்பொழுது முன்னுள்ள கொழு வயலை உழுதுசெல்லத் துன்னாசியு மக்கொழுச் சென்றவழியே இடர்ப்படாது செல்லும். அதுபோல முன்னுள்ள புறவுரை சென்ற வுள்ளத்திலே நூலு மினிது செல்லும். இக் கருத்துக்கொண்டே நூல்கேட்கின்றான் புறவுரை கேட்கின் கொழுச்சென்றவழித் துன்னூசி யினிது செல்லுமாறுபோல அந்நூலினிது விளங்குமென்றார். எனவே கொழுப் பாயிரத்திற்கும், துன்னூசி நூலிற்கும், வயல் ஒருவ னுள்ளத்திற்கும் உவமையாகும். இக் கருத்தமையவே, திருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம்பிள்ளை யவர்கள், |
"இசைபடும் பருப்பொ ருட்டா மிலக்கியம் சென்ற வாறே வசைதவிர் நுண்பொ ருட்டா மிலக்கணம் வயங்கிச் செல்லும் நசையுண ரொருவன் மாட்டு நறும்புனல் வயலின் மாட்டு மசைவிறிண் கொழுச்செல் லாறே துன்னூசி யழகிற் செல்லும்." |
|
என்று கூறியுள்ளார்கள். |
கொழுவைப் பாயிரத்திற்கும், துன்னூசியை மாணாக்கன் அறிவுக்கும், வயலை நூலுக்கும் உவமையாகக் கொள்ளுமாறு இவ் வாக்கியம் எழுதப்பட்டிருப்பின் மிகப் பொருத்தமாகும். ஏனெனில், நூலுட் புகுவோன் மாணாக்கனாதலானும், பின்னும், பாயிரம் கேளாக்கால் குன்று முட்டிய குரீஇப் போலவும் குறிச்சிபுக்க மான்போலவும் மாணாக்கன் இடர்ப்படுமென நூலுட் புகுதலை மாணாக்கனுக்கே கூறுதலானும் என்க. எனவே, பாயிரங்கேட்ட மாணாக்கன் அவ் வறிவோடு நூலுட் புக்கால் அவ்வறிவு நூலை விளக்க அவற்கு நூலினது விளங்கும் என்பது அதன் கருத்தாம். |
"புறவுரை யேயது கேட்டென்னை பயனெனின் மாயிரு ஞாலத் தவர்மதித் தமைத்த பாயிர மில்லாப் பனுவல் கேட்கிற் காணாக் கடலிடைக் கலைஞரில் கலத்தரின் மாணாக் கன்றன் மதிபெரி திடர்ப்படும்." |
|
என மாணாக்கனறிவே நூலுட் புகுவதாக மாறனலங்காரச் சூத்திரங் கூறுமாற்றானும் இக் கருத்துப் பொருத்தமாதல் காண்க. |
பருப்பொரு ளென்பதும் நுண்பொரு ளென்பதும் முறையே பாயிரம் நூல் என்பவற்றி னியல்பை யுணர்த்தி அவற்றிக் கடையாய் நின்றன. |
இனி, பாயிரம் யாப்பருங்கல விருத்திப் பாயிரவுரையுட்போல நூற் பொருளைச் சுருக்கிப் பருப்பொருட்டாக விளக்குதல்பற்றியே ; |
"பருப்பொருட் டாகிய பாயிரங் கேட்டார்க்கு நுண்பொருட் டாகிய நூலினிது விளங்கும்." |